டெல்லி நிர்வாக அதிகாரம் யாருக்கு?...டெல்லி முதல்வர் Vs துணை நிலை ஆளுநர்

x

28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களை கொண்ட இந்தியாவில், மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது.ஆனால் யூனியன் பிரதேசங் களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது. இதனால் யூனியன் பிரதேசங்களில் முதலவர்களுக்கும் துணை நிலை ஆளுநர்களுக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துணை நிலை ஆளுநருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும் கடுமையான மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்த சூழலில் தான் டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாக சேவைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்றும் அதன் முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே ரத்து செய்யும் விதமாக ஒரு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது மத்திய அரசு. இந்த சட்டத்தின் மூலம் "தேசிய தலைநகர் குடிமைப் பணியாளர் ஆணையம்"(NCCSA) கொண்டு வரப்பட்டுள்ளது.

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் சமநிலை ஏற்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய தலைநகர் பிரதேச சட்டம்(NCTD)இல் திருத்தம் செய்து தேசிய தலைநகர் பிரதேச சட்டம் 2023 கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தேசிய தலைநகர் குடிமைப் பணியாளர் ஆணையத்தில் டெல்லி முதல்வர் தலைமையில் டெல்லி தலைமைச் செயலாளருடன், உறுப்பினர் செயலராக டெல்லி அரசின் முதன்மை உள்துறை செயலர் ஆகிய 3 பேர் இருப்பார். இவர்கள் அடங்கிய ஆணையமே குடிமைப் பணியாளர்கள் கண்காணிப்பு, இடமாற்றம் போன்ற விஷயங்கள் குறித்து முடிவு எடுத்து துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைக்கும்.

ஆணையத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய அனைத்து விஷயங்களும், இதில் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானிக்கப்படும். அதாவது, டெல்லி முதல்வரின் முடிவை மற்ற இரண்டு அதிகாரிகளால் நிராகரிக்க முடியும். மேலும் இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த துணை நிலை ஆளுநர் உத்தரவிட முடியும். ஒரு வேளை ஆணையத்தின் பரிந்துரைகளில் துணை நிலை ஆளுநருக்கு ஆட்சேபம் இருக்கும் பட்சத்தில், அதனை திருப்பி அனுப்பும் அதிகாரமும் அவருக்கு உள்ளது. இது போன்ற சூழல்களில் துணை நிலை ஆளுநரின் முடிவே இறுதியானது. இது போன்ற காரணங்களால் தான், அவசர சட்டத்தை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்களை நேரிலேயே சந்தித்து வேண்டுகோள் விடுக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.


Next Story

மேலும் செய்திகள்