தமிழகத்தையே கதறவிடும் காய்கறி விலை...இன்னும் 1 மாசம் இறங்க சான்ஸே இல்லை - அதிர வைக்கும் காரணங்கள்

x

சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. திடீர் காய்கறி உயர்வுக்கான காரணம் பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் விவரிக்கிறது இந்த தொகுப்பு....

ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய்... ஒரு கிலோ பீன்ஸ்ஸின் விலை 120 ரூபாய், இஞ்சியின் விலையோ கிலோ 200 ரூபாய்... என கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை தங்கத்தின் விலையைப்போல உயர்ந்து கொண்டே செல்கிறது.

அன்றாட சமையலின் அத்தியாவசிய பொருளான தாக்களி கடந்த வாரம்கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது100 ரூபாய்க்கு விற்பனையாகி இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த வாரம் ஒரு கிலோ பீன்ஸ் 80 ரூபாய் வரை விற்பனையான நிலையில், இன்று 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல இஞ்சியின் விலை கடந்த இரண்டு வாரங்களாக 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

அதே போல், கடந்த வாரம் கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வண்ன குடைமிளகாய் தற்போது ரூ. 200க்கும், ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ அவரைக்காய் ரூ. 70க்கும், 30ரூபாய்க்கு விற்கப்பட்ட கொத்தவரங்காய் ரூ. 35க்கும், ரூபாய் 130க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பூண்டு ரூ. 160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் ஒரு கிலோ வெண்டைக்காய் 40 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அது 50 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. ஊட்டி கேரட் 65 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும், பச்சை குடைமிளகாய் 55 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், முருங்கைக்காய் 30 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. இதே போல் இதர காய்கறி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

தற்போதைய திடீர் மழை மற்றும் காற்கறிகளின் வரத்து கணிசமாக குறைந்திருப்பதின் காரணமாக, காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறும் வியாபாரிகள் இன்னும் ஒருமாத காலம் இந்த விலையேற்றம் நீடிக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் கூறுகின்றனர்

இந்த திடீர் விலையேற்றத்தால் விழி பிதுங்கும் பொதுமக்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை முன்வைக்கிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் உணவுத்துறை செயலாளருமான நிர்மலா. "காற்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை, சந்தையில் எப்போதெல்லாம் பலமடங்கு உயர்ந்து பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகின்றதோ, அப்போது அரசின் கைவசம் உள்ள விலை கட்டுப்பாட்டு நிதியத்தின் மூலம், மொத்த வியாபாரிகளிடம் இருந்து காற்கறிகளை அரசே வாங்கி, அதை குறைந்த விலைக்கு பன்னை பசுமை நுகர்வோர் காற்கறி கடைகள் மூலம் விற்பனை செய்யலாம். இப்படி சில நாட்கள் செய்யும்போதும், காய்கறிகளின் விலையேற்றம் கட்டுக்குள் வரும்" என்கிறார்.

ஒரு சில தினங்கள் பெய்த மழைக்கே காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், பருவ மழை தொடங்கி விட்டால், காய்கறிகளின் விலை மேலும் உயரும். அதை கட்டுக்குள் கொண்டுவர அரசு தற்போதே விழித்துக் கொண்டு, நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது....


Next Story

மேலும் செய்திகள்