"நாயகன் மீண்டும் வரான்.." கிண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட்

x

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த மூன்று ஆண்டுகள் விராட் கோலிக்கு சோதனையான காலம்தான்.... கிரிக்கெட்டின் முடிசூடா அரசனாகக் கருதப்படும் கோலி அவரது கேரியரில் மிகப்பெரிய சறுக்கலைச் சந்தித்தது இந்தக் கால கட்டத்தில்தான்...

பழைய பாணியில் கோலி ஆடவில்லை... அவரது ஷாட்களில் நேர்த்தி இல்லை... மிக மோசமான முறையில் ஆட்டம் இழக்கிறார்... சதம் அடிப்பதில்லை... என ஏகப்பட்ட விமர்சனக் கணைகள் கோலி மீது தொடர்ந்து தொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

குறிப்பாக கோலி இவ்வளவுதான்... கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்துக் கொண்டிருப்பதாகவும் சிலர் முடிவுரை எழுத முற்பட்டனர்.

ஆனால், ஆங்கிலத்தில் அழுத்தமான ஒரு சொற்றொடர் உண்டு... YOU SHOULD NEVER WRITE OFF CHAMPIONS...

சாம்பியன் வீரர்களை உங்களால் ஒருபோதும் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது என அதற்கு அர்த்தம்...

ஆம்... அப்படி ஒரு சாம்பியனாக, வீழ்ச்சியில் இருந்து வீறுகொண்டு எழுந்த வீரனாக தனது 71வது சதத்தை ஆசிய கோப்பையில் ருசித்து இருக்கிறார் விராட் கோலி...

சுமார் ஆயிரம் நாட்களுக்குப் பிறகு ரசிகர்களின் தாகத்தை தணித்து, கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார் கோலி...

கிரிக்கெட்டின் பேரரசன் என்றுமே தான் தான் என்பதை இச்சதத்தின் வாயிலாக கோலி ஆழமாக பதிவுசெய்து இருக்கிறார்.

மட்டுமின்றி இந்திய அணியால் ஆசியக் கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் ஏற்பட்ட காயத்திற்கு, களிம்பும் தடவியுள்ளார்.

எண்ணிலடங்கா விமர்சனங்கள்... தேவையின்றி திணிக்கப்பட்ட அழுத்தங்கள்.... உளவியல் ரீதியான சிக்கல்கள்.... என எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கிவிட்டு கோலியின் பேட்டில் இருந்து இச்சதம் ஜனனித்து உள்ளது.

அடுத்த சில ஆண்டுகளுக்கும் சர்வதேச கிரிக்கெட்டின் மைய சக்தி கோலிதான் என்பதற்கு இச்சதம் அச்சாரமாய் மாறி உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக சறுக்கல்களைச் சந்திக்கும் சாமனியர்களுக்கு, சளைக்காமல் போராடும் குணத்தையும், ஆழமான நம்பிக்கையையும் தனது 71வது சதம் மூலம் விதைத்து இருக்கிறார் விராட் கோலி.


Next Story

மேலும் செய்திகள்