2024 தேர்தல் ஆபரேஷனுக்கு டீசர்.. ஆக்ரோஷமாக போட்டு உடைத்த மோடி.. இனி நாடு முழுவதும் ஒரே சட்டம்? - அரளும் அரசியல் களம்

x

இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம் ஏன் அவசியம் என விளக்கம் அளித்துள்ள பிரதமர் மோடி, பாகிஸ்தானில் முத்தலாக் முறை அமலில் இல்லாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பிரதமர் மோடி முன் வைக்கும் கருத்துக்கள் விவாதமாகி உள்ள நிலையில், அது குறித்து தற்போது பார்க்கலாம்

தனது அமெரிக்கா மற்றும் எகிப்து பயணத்திற்குப் பிறகு விரைவில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு வந்தே பாரத் ரயில்கள் சேவையை தொடங்கி வைத்தார்.

அப்போது அங்கு அவர் முத்தலாக் முறையை ஆதரிப்போரை யும் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போரையும் கடுமையாக விமர்சித்தார்.

இந்தியாவில் திருக்குர்-ஆன்-ல் நபிகள் நாயகம் கூறிய பொன்மொழிகளின் அடிப்படையில் 'ஷரியத்' சட்டமே இஸ்லாம் தனிநபர் சட்டமாக உள்ளது.

இந்தியாவில் மலைவாழ் மக்களின் பழக்க-வழக்கம் உட்பட ஏராளமான இந்து தனிநபர் சட்டங்கள் உள்ளன.

இந்தியாவில், அனைத்து சமூக மக்களும் கடைபிடிக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த 1949 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 44ல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டி , கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பொது சிவில் சட்ட பிரச்சனையை மையமாக வைத்து பாஜக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூடாது என காங்கிரஸ், திரிணாமுல், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இதற்கிடையே, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக ஆளும் மாநிலங்கள் ஏற்கனவே தயாராகி வரும் நிலையில், பொது சிவில் சட்டம் தொடர்பாக பாஜக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் பேசிய பிரதமர் மோடி, முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் முஸ்லிம் பெண் குழந்தை களுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்றும்...

ஒரு நாட்டை எப்படி 2 சட்டங்கள் கொண்டு நடத்த முடியும்?.

அரசியலமைப்பு சட்டம் என்பது சமஉரிமை பற்றி பேசுவது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூறியுள்ள நிலையில் , பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் செய்யும் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருப்பதாக விமர்சித்தார்.

முத்தலாக் முறை நீக்கம் செய்யப்பட்டபோது... இஸ்லாம் பெண்கள் மகிழ்ச்சி அடைந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் கத்தார், இந்தோனேசியா வங்கதேசம் சிரியா ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் முறை ஏன் நடைமுறையில் இல்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில், அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்ட பாஜக அரசு, 2024 தேர்தலுக்குள் பிரதான வாக்குறுதியான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்