அம்மாடியோவ் தோனி வீட்டில் இத்தனை பைக்குகளா ? "இப்படிப்பட்ட ஒரு ஆளை நான் பார்த்ததில்லை" - வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்ட வீடியோ

x

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனியின் பண்ணை வீட்டில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.

கிரிக்கெட் வீரர் தோனி என்றாலே சட்டென நினைவுக்கு வருவது அவருடைய மேட்ச் பினிஷிங் சிக்சர் தான். அவருடைய ஹெலிகாப்டர் ஷாட்-டை காண்பதற்கென்றே மைதானத்திற்கு படையெடுத்து வரும் ரசிகர் பட்டாளம் ஏராளம்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடருடன் ஓய்வுபெற்ற எம்.எஸ்.தோனி, அதன் பின் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார் என்பது ஊர் அறிந்த விஷயம்.

இந்நிலையில், பொதுவெளியில் தன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அதிகம் வெளிக்காட்டி கொள்ளாத தோனி, ஒரு தீவிரமான பைக் வெறியர் என்பது தெரியவந்துள்ளது. அதனை உறுதி செய்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்.

தோனியின் பண்ணை வீடு ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 7 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாய் அமைந்துள்ள தனது பண்ணை வீட்டில், பைக் பார்க்கிங் பகுதிக்காகவே பிரத்யேகமாக முதல் இரண்டு தளங்களை ஒதுக்கியுள்ளார் தோனி.

அதில் விதவிதமான பைக்குகளை வாங்கி அடுக்கி வைத்துள்ளார். தோனி முதன் முதலாக வாங்கிய 4500 ரூபாய் பைக் தொடங்கி தற்போதைய லேட்டஸ்ட் மாடல் பைக்குகள் வரை அணிவகுத்து நிற்கின்றன.

இந்நிலையில், அவருடைய வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த, முன்னாள் கிரிக்கெட்வீரர் வெங்கடேஷ் பிரசாத், இது குறித்து வெளியிட்ட வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்-கில் உள்ளது.

சுமார் ஒன்றரை நிமிடங்கள் வரை ஓடும் இந்த வீடியோவில், கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்துள்ள தோனி, தன் வீட்டு கேரேஜை பிரசாத்திற்கு சுற்றிக் காண்பிக்கிறார்.

அதில் சுவாரசியம் என்னவென்றால், அந்த வீடியோவில், "தோனியின் வீட்டில் இருக்கும் 100க்கும் அதிகமான பைக்குகள் காண்பிக்கப்பட்டுள்ளன"

இது குறித்து ட்விட்டரில் பேசியுள்ள வெங்கடேஷ் பிரசாத், "இதுவரை எந்தவொரு மனிதரிடமும் பார்த்திராத வினோதமான ஆர்வத்தை தோனியிடம் கண்டேன்.

இதோ நீங்கள் காண்பது, ராஞ்சி பண்ணை வீட்டில் அவரிடமுள்ள பைக்குகள் மற்றும் கார்கள்.

அவருடைய ஆர்வத்தை கண்டு, நான் ஆடிப் போனேன்." என்று தனது மனதில் பட்டதை, அந்த வீடியோவில் கொட்டி தீர்த்துள்ளார் பிரசாத்.

மேலும், அந்த வீடியோவில், தோனியின் மனைவி சாக்‌ஷிக்கு பதில் அளித்தபடியே பிரசாத் கடந்து செல்கிறார். அதனை தொடர்ந்து பேசிய பிரசாத்,

"நான் இங்கு 4வது முறையாக வருகை தந்துள்ளேன். நிச்சயமாக, தோனி ஒரு பைக் பைத்தியம் தான். அதனால் தான், அவரால் இப்படியொன்றை ஏற்பாடு செய்திருக்க முடிகிறது." என்று தோனியை செல்லமாக கலாய்த்துள்ளார்.

மறுபுறம், இதற்கு பதிலளித்துள்ள சாக்‌ஷி, "அவர் ஒரு பைக் பைத்தியம் தான்" என்று தன் பங்கிற்கு தோனியை கலாய்த்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்