ஒரு நபரின் முரட்டு பிடிவாதம் ஒரு ஊரே விஷம் குடித்த பயங்கரம்.. கடைசி நொடியில் வந்து தட்டிவிட்ட போலீஸ்

x

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி அருகே, ஊரை விட்டு தள்ளி வைத்த கோபத்தில், கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்திய தனிநபரால், மனமுடைந்த கிராம மக்கள் விஷம் கலந்த பாயாசத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற பரபரப்பு சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

ஒரு தனிப்பட்ட நபரின் பிடிவாதம், ஒட்டுமொத்த கிராமமே, விஷம் கலந்த பாயாசத்தை குடிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே, வேப்பமரத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், அந்த கிராமத்து மக்கள் சிலரிடம் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டபோது, தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கிராமத்தில் வசூலிக்கப்படும் வரியை கூட சுரேஷ் கட்டாமல் இருந்து வந்ததும், மாற்று சமூகத்து பெண்ணை கலப்புத் திருமணம் செய்ததாலும், கிராம மக்கள் கோபமடைந்து, அவரை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளனர்.

அதன் பிறகு, கட்டுக்கோப்பான இந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து, கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான பணியை தொடங்கிய போது, கோயில் விழாவை செய்ய விடாமல் தடுக்க, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சுரேஷ்.

அந்த மனுவில், தன்னை கோயிலுக்குள் செல்ல கிராமத்தினர் அனுமதி மறுப்பதாகவும், கலப்பு திருமணம் செய்ததால் சாதி ரீதியாக தன்னை ஒதுக்கி வைத்திருந்ததாகவும் தெரிகிறது. 13 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு, கிராம மக்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.

தீர்ப்பைக் கண்டு மகிழ்ச்சியடைந்த ஒட்டுமொத்த கிராம மக்களும், அடுத்தபடியாக, கோயில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக மேற்கொண்டு வந்தனர்.

ஆனாலும், மீண்டும் பிடிவாதத்துடன் காவல்நிலையம் சென்ற சுரேஷ், தன்னை ஒதுக்கி வைத்துவிட்டு கிராமத்தினர் கோயில் திருவிழா நடத்துவதாகவும், தன்னிடம் வரி வாங்கவில்லை என்றும் புகார் அளித்துள்ளார்.

இதன் விளைவாக, வேப்பமரத்து கிராமத்திற்குள் வந்த போலீசார், கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்த சொல்லியுள்ளனர்.

மறுபடியும் முதல்ல இருந்தா? என மனசு ஒரு பக்கம் கூறினாலும், தனிப்பட்ட நபருக்காக, கோயில் திருவிழாவை போலீசார் நிறுத்தியதால், கிராம மக்கள் மனமுடைந்து எடுத்த முடிவுதான், ஒட்டுமொத்த போலீசாரையே குலைநடுங்க வைத்தது.

ஊருக்கு நடுவே பாயாசத்தை காய்ச்சி, அதில் பூச்சி மருந்தை கலந்து, போலீசார் கண்முன்னே கிராம மக்கள் அனைவரும் குடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது பதறிப்போன போலீசார், பாயாசம் குடிப்பதை தடுத்த நிலையில், அதனையும் மீறி 6 பெண்கள் குடித்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் சுமூகமான கோயில் திருவிழாவை நடத்த பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், கிராம மக்கள் உடன்பட்டதை அடுத்து, கோயில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்