"அரசு அதிகாரிகளுக்கு பயத்தை காட்டினால் தான்.." - அதிரடி காட்டிய ஐகோர்ட் நீதிபதி

x

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் சிவன் தங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரனின் மனைவி தனலட்சுமியும், மகன் டில்லிராஜாவும் ஸ்ரீபெரும்புதூரில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறி 3 பேருக்கும் எதிராக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2010ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், நிலம் வாங்கிய பின் காவல் துறை அதிகாரிகள், உள்ளூர் கவுன்சிலர் மற்றும் வழக்கறிஞருடன் சேர்ந்து 10 லட்சம் ரூபாய் பணம் கேட்ட போது அதை தர மறுத்ததால் தங்களுக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசுத்துறைகளில் அதிகளவில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்காததால், நாளுக்கு நாள் லஞ்ச லாவண்யம் மலிந்து வருவதாகவும், அரசு அதிகாரிகளுக்கு சட்டத்தின் பயத்தை காட்டினால் ஒழிய, ஊழலை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலனை நியமித்து, அறிக்கை அளிக்க அறிவுறுத்தி விசாரணையை ஜூன் 7 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்