அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம்.. செக் வைத்த கோர்ட்.. ஒரே உத்தரவில் 7 கண்டிஷன்கள்

x

செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியை வழங்கியிருக்கும் நீதிமன்றம், விதித்திருக்கும் நிபந்தனைகள் என்ன...? என்பதை பார்க்கலாம்

செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் இடைக்கால ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் குறித்து விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியை வழங்கினார். காணொலி வாயிலாக ஆஜரான செந்தில் பாலாஜி, அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் காவலில் அனுப்பக்கூடாது என கோரினார்.

அதற்குதான் மருத்துவமனையில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்திருப்பதாக தெரிவித்த நீதிபதி, உத்தரவுகளை முழுமையாக படித்துவிட்டு உரிய நிவாரணத்தை தேடும்படி அறிவுறுத்தினார்.

அமலாக்கத்துறை விசாரணையில் அசௌகரியம் ஏதும் ஏற்பட்டால், செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதி அல்லி அனுமதி அளித்தார்.

செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறை துணை இயக்குநர் ஸ்ரீ.கார்த்திக் தாசரிக்கு நீதிமன்றம் நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

அதாவது செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையைவிட்டு வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.

செந்தில் பாலாஜியின் உடல்நிலை, மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கருத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும்.

சிகிச்சைக்கு எந்தஒரு இடையூறும் இல்லாமல் விசாரிக்க வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு போதிய உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும், மூன்றாம் தர விசாரணை முறையை பயன்படுத்தக்கூடாது, குற்றம் சாட்டப்பட்டவரை எந்தவிதமான துன்புறுத்தலும் செய்யக்கூடாது.

செந்தில் பாலாஜியை மிரட்டவோ, அச்சுறுத்தவோ கூடாது.

குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள், மருத்துவ ஆலோசனைக்கு உட்பட்டு காவலின் போது குற்றம் சாட்டப்பட்டவரை பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் இருக்கும்போது அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்கவேண்டும் என 7 நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்