உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே நாடு கடத்தப்படுகிறாரா?

உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில், அவர் யார்...? அவர் விவகாரத்தில் நடப்பது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்...
x


ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் டவுன்ஸ்வில்லே நகரில் 1971 ஆம் ஆண்டு பிறந்தவர் புலனாய்வு பத்திரிக்கையாளரான அசாஞ்சே.


சுவீடனில் 2006-ம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளத்தை தொடங்கியவர், ஆப்கானிஸ்தான், ஈராக் போர் தொடுத்தது தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை 2010 ஆம் ஆண்டு வெளியிட்டு உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.


அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கைகள் வெளியிட்டதுடன், அதன் முகத்திரையை கிழித்தவர். இதனால் அதிர்ந்து போன அமெரிக்கா அவரை கைது செய்து விசாரிக்க தயாரானது.


சுவீடனில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதும் லண்டனுக்கு தப்பினார் அசாஞ்சே. உடனடியாக லண்டனில் கைது செய்யப்பட்டவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே பாலியல் புகார் வழக்கில் சர்வதேச கைது வாரண்டை பிறப்பித்தது சுவீடன்.


இது தன்னை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முயற்சியென்றார் அசாஞ்சே. இந்த போராட்டத்தில் பின்னடைவை சந்தித்த அசாஞ்சே உடனடியாக ஈக்குவடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் கோரினார். 2012 ஆம் ஆண்டு தஞ்சம் கிடைத்தது.


ஆனால் பிரிட்டன் வழங்கிய ஜாமீன் நிபந்தனைகளை மீறிய வழக்கு சுமையானது. ஈக்குவடார் தூதரகத்தில் இருந்தவாறு 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிப்பெறுவதற்கு ஏதுவாக, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் ரகசிய இமெயில்களை கசியவிட்டார்.


இந்த நிலையில் சர்வதேச சட்டதிட்டங்களை அசாஞ்சே மீறி வருகிறார் என ஈக்குவடார் நாடு 7 ஆண்டுகளாக அளித்து வந்த தஞ்சத்தை 2019 ஆம் ஆண்டு திரும்பப்பெற்றது.


இதனையடுத்து ஜாமீன் பெற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றச்சாட்டில் லண்டனில் கைது செய்யப்பட்ட அசாஞ்சேவுக்கு, நீதிமன்றம் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதித்தது. உளவு பார்த்ததாக அசாஞ்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் 17 குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே அவரை நாடு கடத்த இங்கிலாந்து அதிகாரிகளிடம் அமெரிக்கா தொடர்ந்து கேட்டு வந்தது.


இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அசாஞ்சேவை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அவரை வெளியேற்ற பிரிட்டன் உள்துறை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ஆனால் தனது கணவர் பத்திரிக்கையாளர் பணியைதான் செய்தார் என்றும் அவரை காப்பாற்ற தனது போராட்டம் தொடரும் எனவும் அசாஞ்சே மனைவி ஸ்டெல்லா கூறியிருக்கிறார். நாடு கடத்துவதற்கு எதிராக மேல் முறையீடு செய்ய அசாஞ்சேக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளதாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.





Next Story

மேலும் செய்திகள்