சென்னையில் TTF செய்த சம்பவம்... முக்கிய சாலையில் பரபரப்பு

x

பிரபல யூடியூபர் டி.டி.எப் வாசன் சென்ற கார், இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்து அதை வீடியோவாக தனது யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமடைந்தவர் டி.டி.எப் வாசன். இவருக்கு அதிகளவில் இளைஞர்கள் ரசிகர் பட்டாளம் உள்ளது.

சமூக வலைதளங்களில் பிரபலமடைந்த டி.டி.எப் வாசன், சமீபத்தில் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது

ஏற்கனவே அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாகவும், நம்பர் பிளேட் இல்லாமல் காரை இயக்கியதாகவும் என சாலை விதிகளை மீறியதாக டி.டி.எப் வாசன் மீது போலீசார் வழக்குபதிவு செய்த சம்பவமும் அரங்கேறி உள்ளது

இந்த நிலையில் மேலும் ஒரு சர்ச்சையில் யூடியூபர் டி.டி.எப் வாசன் சிக்கி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக டிடி.எப் வாசன் தனது நண்பர்களுடன் காரில் வந்துள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதேநேரம் வாசன் சென்ற காரின் முன்பக்கம் சேதமடைந்தது.

உடனடியாக டி.டி.எப் வாசன் மற்றும் அவருடன் பயணித்த நண்பர்கள் காரை விட்டு இறங்கி ஆட்டோ பிடித்து கிளம்பி சென்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்து சம்பவத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் யாரும் காவல் நிலையத்திற்கு வந்து புகார் தரவில்லை எனவும் புகார் கொடுக்கும் பட்சத்தில் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைந்தகரை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். காரை டி.டி.எப் வாசன் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினாரா? அல்லது உடன் வந்த நபர்கள் காரை ஓட்டினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்