'கபசுர குடிநீர்' ரூபத்தில் நடமாடிய கள்ளச்சாராயம்.. தமிழகத்தை உலுக்கிய மரணங்கள்

x

மரக்காணம் கள்ளச்சாராய மரணங்கள் தமிழகத்தை உலுக்கியிருக்கும் சூழலில், தமிழகத்தில் கள்ளச்சாராயம் அப்பாவி மக்களின் உயிரை குடித்தது என்ற வரலாற்றை நினைவு கூறுகிறது இந்த தொகுப்பு...

மரக்காணத்தில் கள்ளச்சாராயத்திற்கு உறவுகளை காவு கொடுத்துவிட்டு பெண்கள் அடித்து அழும் காட்சி சற்று 90-களை நினைவு கூறுகிறது.

80, 90-களில் மதுபான விற்பனை தடை காலங்களில் எல்லாம் மெத்தனால், கள்ளச்சாரயம் குடித்து கருகியவர்கள் பலர்.. இதில் 2001-ல் மாநிலம் மிகப்பெரிய மெத்தனால், கள்ளச்சாராய இழப்புகளை கண்டது. அப்போது100 பேரது உயிரை காவு வாங்கியிருந்தது.

உயிரிழப்புகளில் பெரும்பாலும் மதுபழக்கத்திற்கு ஆளான ஏழை விவசாயிகள் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவலாக இருந்தது. இதனையடுத்து மதுபான விற்பனையை ஒழுங்கு படுத்திய மாநில அரசு, மெத்தனால், கள்ளச்சாராயம் எப்படி விஷமாகிறது என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டது.

2008 ஆம் ஆண்டு கர்நாடகா-தமிழக எல்லையில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் நாட்டையே உலுக்கியது. கர்நாடக எல்லையில் காய்ச்சப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 45-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண் பார்வையை இழந்து, குடல் அவிந்து உயிரிழந்தனர்.

எல்லையில் கள்ளச்சாராய கும்பல்களை காவல்துறையும் வேட்டையாடியது. குண்டர் சட்டமும் பாய்ந்தது. இருப்பினும் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியது.

இப்படி 2005-2014 வரையிலான 10 ஆண்டுகளில் கள்ளச்சாராய சாவுகள் அதிகம் நடந்தது தமிழகத்தில்தான் என்கிறது தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கை... 10 ஆண்டுகளில் சுமார் 1509 பேர் இறந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

2018 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப் பட்டியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கள்ளச்சாராய விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள் வேட்டையும், விழிப்புணர்வு பிரசாரமும் தொடர கள்ளச்சாராய மரணம் மட்டுப்படுத்தப்பட்டது.

இதற்கு எமனாக உருவெடுத்தது கொரோனா.... கொரோனா ஊரடங்கு காலக்கட்டங்களில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்ச தொடங்கிவிட்டார்கள்... சில வீட்டிலியே குக்கரில் சாராய நெடி வீச தொடங்கியது. திருச்சியில் டீ கேனில் கபசுர குடிநீர் என்ற பெயரில் கள்ளச்சாராயம் நடமாட்டம் தலைசுற்ற வைத்தது. இப்படி நூதன சாராய காய்ச்சல் செய்திகள் எல்லாம் கிரங்கச் செய்தது. மலைப்பகுதியில் ஊறல்கள் மட்டும்மல்ல... சென்னை மெரினா கடற்கரைக்கே வந்தது கள்ளச்சாராயம்...

மாநிலத்தில் 2019-ல் பூஜ்ஜியமாக இருந்த கள்ளச்சாராய உயிரிழப்பு 2020-ல் 20 ஆக அதிகரித்தது என்கிறது தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கை... மயிலாடுதுறையில் 2021 மே மாதம் கள்ளச்சாராயம் குடித்த இருவர் கண்பார்வை இழந்து பலியாகினர். அவ்வாண்டு கள்ளச்சாராய சாவு தமிழகத்தில் 6 ஆக இருந்தது என தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அடுத்து நடைபெறும் கைது நடவடிக்கைகள்... இவ்வளவு பேர் கள்ளச்சாராயம் காய்ச்சினார்களா...? என மக்களை விழிபிதுங்க செய்திருக்கிறது. இவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது அவர்களது வலியுறுத்தலாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்