ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் சோதனை - லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி நடவடிக்கை

x

கடந்த 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தனது பணியை தொடங்கியவர் மலர்விழி... 2015 முதல் 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில், சிவகங்கை ஆட்சியராக பணி புரிந்தார்.அதன் பிறகு, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை, தருமபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி பதவி வகித்தார். தற்போது சென்னை அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர், தருமபுரியில் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த காலகட்டத்தில், கிராம ஊராட்சிகள் மற்றும் ஒன்றிய அலுவலகங்களுக்கு வழங்கக்கூடிய ரசீது புத்தகங்களை, அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ததாக புகார் எழுந்தது. அதாவது 40 ரூபாய் மதிப்பிலான ரசீதை 135 ரூபாய்க்கு கொள்முதல் செய்ததன் மூலம், அரசுக்கு ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மலர்விழி ஐஏஎஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கிருமி நாசினி கொள்முதல் செய்ததிலும், முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மலர்விழி ஐஏஎஸ் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர்கள் தாகீர் உசேன், வீரய்யா பழனிவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மலர்விழி ஐஏஎஸ் அதிகாரியின் அடுக்குமாடி குடியிருப்பில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீரய்யா பழனிவேலுக்கு சொந்தமான வீடு என சென்னையில்‌ 5 இடங்களிலும்‌, விழுப்புரம்‌, தருமபுரியில்‌ தலா ஒரு இடங்களிலும்‌, புதுக்கோட்டையில்‌ 3 இடங்களிலும்‌ லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்