கெலாட் /பைலட் மோதல் உச்சகட்டம் - ராஜஸ்தான் காங்கிரசில் நடப்பது என்ன?

x
  • பிரிக்க முடியாதது காங்கிரசும் உட்கட்சி பூசலும் என சொல்லும் அளவிற்கு உட்கட்சி பூசலுக்கு பெயர் போனது காங்கிரஸ்.
  • இதனால் மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்த வரலாறும் காங்கிரசுக்கு உண்டு. இப்போது அதுபோன்ற ஒரு சூழல்தான் ராஜஸ்தானில் உருவாகியிருக்கிறது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
  • அங்கு முதல்வராக இருக்கும் கெலாட்டுக்கும், காங்கிரசில் இளம் ரத்தமாக பார்க்கப்படும் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான உரசல் அவ்வப்போது வெளிப்பட்டு வருகிறது.
  • கடந்த 2020 ஆம் ஆண்டு சச்சின் பைலட் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் கெலாட் அரசை கவிழ்க்கும் சூழல் ஏற்பட்டது. இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்ற காங்கிரஸ், 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது பைலட் ஆதரவாளர்களுக்கு இடமளித்தது. ஆனால் உரசல் நின்றபாடில்லை... இந்த சூழலில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கெலாட்டை களமிறக்க காங்கிரஸ் விரும்பியது.
  • கெலாட்டை காங்கிரஸ் தலைவராக்கிவிட்டு, பைலட்டை முதல்வராக்கிவிட்டு பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என காங்கிரஸ் திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், காங்கிரஸ் வியூகம் பொய்த்து போனது. கெலாட் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு தலைவர் பதவிக்கு வர தயாராகவில்லை என்பது தெரியவந்தது.
  • மாநிலத்தில் உட்கட்சி பூசல் தொடர்ந்து புகைந்தது. இந்த சூழலில்தான் சொந்த கட்சி ஆட்சிக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் என களமிறகியிருக்கிறார் சச்சின் பைலட்... மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் என்றார் சச்சின் பைலட்...
  • போராட்டம் கட்சிக்கு எதிரான நடவடிக்கை என்றது காங்கிரஸ் தரப்பு... ஆனால் திட்டமிட்டபடி போராட்டத்தில் அமர்ந்தார் பைலட். இது காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
  • முன்னாள் மத்திய அமைச்சரான 45 வயதாகும் சச்சின் பைலட், 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ், ராஜஸ்தானில் ஆட்சியை இழந்ததும் மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
  • அவரது தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினாலும், இடைத்தேர்தல்களில் வென்றது. கிராமம் கிராமமாக நடை பயணம் சென்று காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார்.... இறுதியில் 2018 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தது.
  • அப்போது சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அசோக் கெலாட் முதல்வரானார். ஆனால் சச்சின் பைலட்டை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தொடர்ந்து முன்வைத்து வந்தனர்.
  • ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத்- ஜோதிராதித்ய சிந்தியா இடையிலான கோஷ்டி பூசலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. பஞ்சாப்பில் அமரீந்தர் சிங் - சித்து இடையிலான மோதலில் தேர்தலில் ஆட்சியை இழந்தது.
  • இப்போது இவ்வாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவிருக்கும் ராஜஸ்தானிலும் காங்கிரசுக்கு சவாலாக உருவெடுத்துள்ளது கெலாட்-பைலட் மோதல்... நிலைமையை சமாளிக்க கட்சி தலைமை மும்முரம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்