"ஜி20 மாநாடு நடத்த கூடாது..." கொந்தளித்த சீனா..!சதி தீட்டும் பாகிஸ்தான் - உஷார் நிலையில் காஷ்மீர்

x

மிகப் பெரிய பொருளாதாரங்களை கொண்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்புகளை இணைத்து 1999ல் உருவாக்கப்பட்டது ஜி20. சுழற்சி முறையில் இதன் தலைமை ஆண்டு தோறும் மாற்றப்படுகிறது. தற்போது இந்தியா இதன் தலைமையை ஏற்றுள்ளது.

உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜி20 கூட்டமைப்பின் பங்கு 80 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் 66 சதவீதத்தையும், சர்வதேச வர்த்தகத்தில் 75 சதவீதத்தையும், உலகின் மொத்த நிலப்பரப்பில் 60 சதவீதத்தையும் கொண்டுள்ளது. சர்வதேச நிதி பரிமாற்றங்கள், பருவநிலை மாற்றம், நிலைக்கத்தக்க வளர்ச்சி போன்ற உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் அம்சங்கள் பற்றி ஜி20 கூட்டமைப்பு கவனம் செலுத்துகிறது. ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று தொடங்கியுள்ள ஜி20 சுற்றுலா துறைக்கான செயற்குழுவின் உச்சி மாநாட்டில் சுமார் 60 சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

பசுமை சுற்றுலா, டிஜிட்டல்மயமாக்கல், திறன் மேம்பாடு, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றைப் பற்றி ஜி20 சுற்றுலா துறைக்கான செயற்குழு விவாதிக்க உள்ளது. திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படும் இடங்களுக்கு சுற்றுலா பயணங்களை ஊக்கப்படுத்த தேவையான செயல் திட்டங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை நிலைநிறுத்த ஜி 20 கூட்டங்களை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. இதனை ஆமோதிப்பது போல சமீபத்தில், சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் ஜி20 கூட்டங்களை நடத்துவதை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் இதுபோன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தது. இது ஒரு புறம் இருக்க கிழக்கு லடாக்கில் மூன்று ஆண்டுகளாக இந்தியா சீனாவிற்கு இடையே நீடித்து வரும் எல்லை மோதலும் காரணமாக கருதப்படுகிறது. இந்த மாநாட்டில் துருக்கி மற்றும் சவுதி அரேபியாவும் கலந்து கொள்ளவில்லை.

தீவிரவாத தாக்குதல் பற்றிய அச்சுறுத்தல்கள் தொடர்வதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச பிரதிநிதிகளை குல்மார்க் உள்ளிட்ட சில சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்