பிரபல சென்னை Food Review யூடியூபருக்கு நேர்ந்த சோதனையும் அதிசயமும்.. அவரே வெளியிட்ட வீடியோ

x

ஓட்டல்களை தேடிச் சென்று விதவிதமான உணவுகள் தொடர்பாக, தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருபவர் தேவராஜ். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், புதுச்சேரியில் உள்ள தனியார் உணவகத்திற்கு தேவராஜ் சென்றபோது, தனது விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை உணவக வாயிலில் நிறுத்திச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் மாயமானதைக் கண்டு ளஅதிர்ச்சி அடைந்தார் தேவராஜ். அக்கம்பக்கத்தில் விசாரித்தும் வாகனம் கிடைக்காததால், அதுதொடர்பாக, புதுச்சேரி பெரியகடை காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, தேவராஜ் சென்னை திரும்பினார். ஆசையாய் வாங்கி தொலைத்துவிட்ட இருசக்கர வாகனம், இனி தனக்கு கிடைக்காது என்ற மனநிலையில் தேவராஜ் இருந்தபோது,சில மாதங்கள் கழித்து, சென்னை அடையாறு பகுதியில், அவரது வாகனம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதற்காக, 500 ரூபாய் அபராதம் செலுத்த சொல்லி, தேவராஜின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதனை அடிப்படையாக வைத்து, சென்னை அடையாறு போலீசாரிடம் சென்ற தேவராஜ், நடந்த சம்பவங்களைக் கூறியுள்ளார். மேலும், விதிமீறலில் ஈடுபட்டதற்காக அபராதம் விதிக்கும் போது, அந்த நபரின் ஓட்டுநர் உரிமம் எண்ணை, போலீசாரிடம் இருந்து தேவராஜ் பெற்றுள்ளார்.அதனை வைத்து விசாரித்தபோது, ஓட்டுநர் உரிமம் பூந்தமல்லியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் பெறப்பட்டது தெரியவந்தது. ஓட்டுநர் உரிமம் தொடர்பான விவரத்தை போலீசாரிடம் தேவராஜ் கேட்டபோது, புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருவதால், அங்கு சென்று விசாரிக்குமாறு தெரிவித்துள்ளனர். எனினும் மனம் தளராத தேவராஜ், பூந்தமல்லி ஆர்டிஓ அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர் மூலம், ஓட்டுநர் உரிம எண்ணை வைத்து, அந்த நபர் யார் என்ற விவரத்தை பெற்றார்.

தனது இருசக்கர வாகனத்தை திருடிய நபர், விழுப்புரத்தை சேர்ந்த சதீஷ் என தெரியவந்ததை அடுத்து, அவரது இருப்பிடத்திற்கு தேவராஜ் சென்றுள்ளார். அங்கு சதீஷின் பெற்றோரிடம், வங்கி ஊழியர் போல நடித்து நாடகமாடி விவரங்களை சேகரித்துள்ளார்.பின்னர் சேகரித்த விவரங்களை, ஏற்கனவே புகார் அளித்த புதுச்சேரி காவல்நிலையத்தில் தெரிவிக்க, அதனை வைத்து போலீசார் விசாரணை செய்ததில், இருசக்கர வாகனத்தை சதீஷ்தான் திருடியதும், தற்போது, சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அவர் இருப்பதையும் சைபர் கிரைம் போலீசார் உறுதிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, செல்போன் எண் சிக்னலை வைத்து, சதீஷை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.தனது இருசக்கர வாகனத்தை மீட்க, எப்படி எல்லாம் முயற்சி செய்ததாக, தேவராஜ் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கமாக கூறும் வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.பொல்லாதவன் பட பாணியில், தானாகவே களத்தில் இறங்கி, தொலைந்துபோன இருசக்கர வாகனத்தை, தனி ஒரு ஆளாக மீட்ட யூடியூபர் தேவராஜுக்கு, பாராட்டுகள் குவிகின்றன.


Next Story

மேலும் செய்திகள்