குழந்தைகள் சாக்லேட் வடிவில் சுற்றும் 'எமன்'.. நரம்பு மண்டலத்தையே கொடூரமாக தாக்கும்

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 என்கிற பெயரில் போதை வஸ்துக்கள் விற்பனை செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு காவல்துறை அடக்கி வரும் அதே நேரத்தில், சாக்லெட்டுகள் வடிவில் கஞ்சா விற்பனை களைகட்டி வருவது, சென்னை மாநகர காவல்துறையினரை அதிரவைத்துள்ளது.....
x

சென்னை ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள NTR மேம்பாலம் அருகே , இரவு நேரத்தில் ராயபுரம் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கண்ணன் என்ற நபரின் வாகனத்தை சோதனை செய்தனர். அதில், குழந்தைகள் உண்ணும் சுமார் 40க்கும் மேற்பட்ட சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதுக்குறித்து கண்ணனிடம் விசாரணை நடத்திய​போது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்று தமக்கே உரித்தான பாணியில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாகவும், இராயபுரத்தைச் சேர்ந்த கோயில் பூசாரியான கௌதம் என்பவர் சாக்லேட்டுகளை தன்னிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்..

இதனையடுத்து கௌதமையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது தான், அது வெறும் சாக்லேட் இல்லை, கஞ்சா சாக்லேட் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அவரிடம் மேற்படி விசாரணை நடத்தினர். அப்போது, சென்னை பெரியமேடு பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவரிடம் இருந்து கஞ்சா சாக்லெட்டுகளை வாங்கியதாக கௌதம் ஒப்பு கொண்டிருக்கிறார்.

அந்த கஞ்சா சாக்லெட்டை ஆய்வு செய்ததில், அது மூளையின் நரம்பு மண்டலத்தை எளிதில் பாதிப்படையவைக்கும் தன்மை கொண்டது என போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பெரிய மேட்டில் சுரேசின் குடோனிற்கே சென்ற தனிப்படை போலிசார், அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட கஞ்சா சாக்லேட்டுகளையும், போதை வஸ்துகளையும், கைமாற்ற பயன்படுத்தபட்ட கார் மற்றும் வேன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் குடோனில் கஞ்சா சாக்லெட்டுகளின் பாதுகாப்பிற்கு நின்றிருந்த சந்தோஷ்குமார் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்..

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கஞ்சா விற்பனைக்கு தலைவனான பிரஜாபதி என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.

கொத்தாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் சிறையில் அடைத்தனர்...

இச்சம்பவத்தில் தொடர்புடைய குடோன் உரிமையாளர் சுரேஷ் என்பவர் மட்டும் தலைமறைவாகியுள்ள நிலையில்,

அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குழந்தைகள் சாப்பிடும் சாக்லெட்டுகள் வடிவில், பல லட்ச ரூபாய் மதிப்புடைய கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் , வட சென்னை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்