திடீரென உயிரிழந்த மகன்.. தாங்க முடியாமல் ஜலசமாதி அடைய வீட்டை விட்டு ஓடிய தாய் - போராடி மீட்ட கணவனின் உருக வைக்கும் உண்மை காதல்

x

மகனின் இறப்பை தாங்க முடியாமல், வீட்டை விட்டு வெளியேறி, காசியில் ஜலசமாதி அடையச் சென்ற மனைவியை, கணவர் போராடி மீட்ட உருக்கமான சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்சிஎம் கார்டன் பகுதியில் வசித்து வரும் சதீஷ் - வித்யா என்கிற ஜெயஸ்ரீ என்ற தம்பதிக்கு, ஸ்ரீவர்ஷோ என்ற மகனும், 17 வயதில் ஒரு மகளும் இருந்துள்ளனர்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகன் ஸ்ரீவர்ஷோ, கடந்த 14ம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மகனின் இறப்பு, பெற்றோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் மகனின் ஞாபகத்திலேயே இருந்த தாய் வித்யா, கடந்த 19ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

காலை விடிந்ததும் தூக்கத்தில் இருந்து எழுந்த கணவர் சதீஷ், மனைவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கும், இங்கும் தேடியும் மனைவி கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்த அவர், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தபோது, வீட்டில் வித்யா எழுதிய கடிதம் ஒன்று, கணவரின் கண்ணில் பட்டுள்ளது. அதில், வித்யா தனது மகனை பிரிந்து வாழமுடியாது எனவும், மகனின் இடத்திற்கே போக விரும்புவதாகவும் அதில் எழுதியிருந்தது.

மேலும், மகளை அழ வேண்டாம் என்றும், தந்தையை பார்த்து கொள்ளுமாறும் என வித்யா எழுதிய உருக்கமான கடிதத்தைக் கண்டு, கணவர் சதீஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், வித்யாவின் வீட்டிலிருந்து அருகாமையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்துள்ளனர். அப்போது, வித்யா அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்து தியாகராயா மெட்ரோ ரயில் நிலையம் செல்வது தெரிந்தது.

பின்னர் மெட்ரோ நிலையத்தில் விசாரித்தபோது, சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்வது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே போலீசாரின் உதவியை நாடியபோது, கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வித்யா பயணம் மேற்கொண்டது அங்கிருந்த சிசிடிவியில் தெரியவந்தது.

இதனிடையேதான், வித்யா தனது உறவினர் ஒருவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, பயணம் செய்யும் ரயில் இருக்கை எண் மற்றும் கங்கை நதிக்கு சென்று ஜலசமாதி அடைவதாக கூறிய தகவல், வித்யாவின் கணவருக்கு தெரியவந்தது.

உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் உதவியுடன் ரயில் பயணம் செய்து கொண்டிருந்ததை, டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நாக்பூரில் இருந்த பெண் அதிகாரிகளின் உதவியோடு ஜலசமாதியடைய சென்ற வித்யாவை மீட்டனர்.

மகன் இறந்த சோகத்தில் ஜலசமாதி அடையைச் சென்ற பெண்ணை, புகாரின் பேரில் உள்ளூர் மற்றும் ரயில்வே போலீசார் போராடி மீட்டது பாராட்டைப் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்