வெளிநாட்டில் தந்தை உயிரிழந்த சிசிடிவி காட்சி - உடலை மீட்டுத் தரக்கோரி கலெக்டரிடம் கதறிய மகள்

x

வெளிநாட்டில், மாரடைப்பால் உயிரிழந்த தந்தையின் உடலை மீட்டுத் தரக்கோரி, கடலூர் ஆட்சியரிடம் மகள் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில், மக்கள் குறை கேட்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், வடலூரைச் சேர்ந்த கிரிஜா என்பவர் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், தனது தந்தை அன்பு என்பவர், சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், கடந்த செப்டம்பர் 21ம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே தமிழக அரசு இதில் தனிக் கவனம் செலுத்தி, இறந்த தந்தையின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதனிடையே, ரியாத்தில் உள்ள வணிக வளாகத்தில், அன்பு பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சியையும், உயிரிழந்தவரின் மகளான கிரிஜா, ஆட்சியரிடம் சமர்ப்பித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், உடலை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உத்தரவாதம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்