அரிசிக்கு அல்லாடும் அமெரிக்கா...பட்டினியால் தவிக்கும் ஆப்பிரிக்கா அலறும் உலக நாடுகள்..

x

இந்தியாவில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை நம்பி உள்ள உலக நாடுகள் பலவும்... அரிசிக்கு அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கோதுமையை போல் உள்நாட்டில் அரிசியின் விலையை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதிக்க கூடும் என்ற எச்சரிக்கை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே விடுக்கப்பட்டிருந்தது.

அதனை உண்மையாக்கும் விதமாக... தற்போது பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது, இந்திய அரசு.

இதற்கு காரணம் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கனமழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தான்.

இந்தியாவின் இந்த அறிவிப்பால் உலக அரங்கில் அரிசியின் விலை தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

உலக சந்தையில் இந்தியாவின் அரிசி தான் மலிவு விலையில் விற்கப்படுகின்றதாம்.


உலகில் சுமார் 300 கோடி மக்களின் பிரதான உணவாக அரிசி இருக்கிறது.

சர்வதேச அளவில் இந்தியாவிலிருந்து தான் அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதத்திற்கும் மேல். இங்கிருந்து சுமார் 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் பங்கு மட்டும் 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டில், உலக அரிசி ஏற்றுமதி 5.54 கோடி டன்களாக இருந்த போது.... அதில் இந்தியாவின் பங்கு மட்டும் சுமார் 2.22 கோடி டன்கள்

என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதில் பாஸ்மதி அல்லாத அரிசி மட்டும் 1.8 கோடி டன்.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில்

இந்திய அரசின் தடைக்கு முன்பு 10 கிலோ அரிசியின் விலை 20 டாலராக... அதாவது 1,639 ரூபாயாக இருந்த நிலையில் , தற்போது 30 டாலராக அதாவது 2459 ரூபாயாக உயர்ந்துவிட்டது.

அரிசி விலை உயர்வால்

துருக்கி, சிரியா, பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிலும் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் , கருங்கடல் வழியாக உக்ரேனிய உணவு தானியங்களை எடுத்துச் செல்ல அனுமதித்த முக்கிய ஒப்பந்தத்தை ரஷ்யா நிறுத்தியுள்ள சில நாட்களில் இந்திய அரசு அரிசிக்கு தடை விதித்து இருப்பது... ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளது.

கோதுமை.. சோளம் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்வது உக்ரைன் தான்... இதே போல் பல ஆப்பிரிக்க நாடுகளும் இந்தியாவின் அரிசி ஏற்றுமதியையே நம்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இனிவரும் நாட்களில் ஏற்கனவே பஞ்சம் பட்டினி என பரிதவித்து வரும் ஆப்பிரிக்க நாடுகள் இன்னும் கடுமையான பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.



Next Story

மேலும் செய்திகள்