அண்ணனுக்காக தங்கச்சி போட்ட ஸ்கெட்ச்... இன்ஸ்டாவில் 'அம்முக்குட்டியாக' வீடியோ கால்

x

மதுரையில் அண்ணனை வெட்டியவனை இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை வீசி, கணவர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற தங்கச்சி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விளக்குகிறது. இந்த தொகுப்பு.

மதுரை கரிமேடு அருகே முரட்டன்பட்டியில், வினித்குமார் என்பவருக்கும், ஜாக்ஸ் என்பவருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. சில மாதங்ளுக்கு முன்பு ஜாக்ஸை வினித்குமார் கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால், படுகாயங்களுடன் உயிர்தப்பிய ஜாக்ஸ், தனது சகோதரி அனுஷியாவிடம், வினித்குமாரை எப்படியாவது தீர்த்த கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

இதனால், வினித்குமாரை பழிவாங்க நினைத்த தங்கச்சி அனுஷியா, தனது கணவருடன் சேர்ந்து, இன்ஸ்டாகிராமில் அம்முக்குட்டி என்ற போலி பெயரில் கணக்கு உருவாக்கி வினித்குமாருடன் அறிமுகமானார். தான் கோவையில் நர்சிங் படிப்பதாகவும், மதுரையை சேர்ந்த தோழியுடன் தங்கிருப்பதாகவும் கூறி, 2 வாரங்களாக மெசேஜ் மூலம் பழகி வந்துள்ளார்.

வினித்குமாருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், இன்ஸ்டாகிராமில் காதலை வெளிப்படுத்தியதோடு, முகத்தை மறைத்தபடி வீடியோ காலிலும் அடிக்கடி பேசி ஆசையை தூண்டியுள்ளார். திட்டமிட்டபடி தன் மீது வினித்குமாருக்கு காதல் ஏற்பட்டதும், வினித்குமாரை நேரடியாக சந்தித்து கொலை செய்ய அனுஷியா திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, கடந்த 6ஆம் தேதி, தோழி சரண்யாவுடன் மதுரைக்கு வந்திருப்பதாகவும், தன்னை நேரடியாக சந்திக்க வேண்டும் என்றும் கூறி, வினித்குமாரை அழைத்துள்ளார். இதை நம்பி சின்னசொக்கிகுளம் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லா சந்துக்கு சென்றதும், அம்முக்குட்டி என்ற பெயரில் இருந்த அனுஷியா செல்போனை கேட்டுள்ளார். கொடுத்த சில நொடிகளில், அனுஷியாவின் கணவர் ஜானி முருகன், அவரது நண்பன் திருப்பதி ஆகியோர் ஆயுதங்களால் வெட்டியுள்ளனர்.

வினித்குமார் கூச்சலிட்டதால் அவர்கள் தப்பியோடினர். அதே நேரத்தில், படுகாயமடைந்த வினித்குமார், 100க்கு தகவல் அளித்துவிட்டு, தானாகவே வீட்டுக்கு சென்று வெட்டு காயங்களுக்கு மருந்து எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அம்முக்குட்டி என்ற பெயரில் அனுஷியா போலி இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பழகி, கொலைவெறி திட்டம் போட்டது அம்பலமானது.

இதையடுத்து, அனுஷியா அவரது கணவர் ஜானிமுருகன், தோழி சரண்யா, நண்பர் திருப்பதி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அண்ணனை கொலை செய்ய முயன்ற நபரை, இன்ஸ்டா மூலம் பழகி கொலை செய்ய முயன்ற தங்கை, கணவர் மற்றும் நண்பர்களுடன் இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்