திருச்சியில் கேட்பாரற்று கிடந்த 10 கார்கள் - வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கடந்த 23 ஆம் தேதி கோவை மாநகரில் காரில் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் உத்தரவின்பேரில் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் படி காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் அமர்வுநீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐயப்பன்கோவில் அருகில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 2 இரு சக்கர வாகனத்தையும், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் அந்த கார்களை வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை கொண்டு சோதனை செய்தனர்.
பின்னர் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதே போல், திருச்சி பிரபாத் ரவுண்டானா முதல் மரக்கடை வரை திருச்சி மாநகர உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் கேட்பாரற்று கிடந்த ஒன்பது கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.