டிரம்ப் பதவியேற்பில் திருப்பம்.. அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய மாற்றம் - துரத்தும் அபசகுனம்
டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் என்ன...? மாற்றம் ஏன்..? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு
அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக பதவியேற்கும் டிரம்புக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
பதவி பிரமாணம் ஏற்று கொண்டதும், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்ட அணி வகுப்புகள் நடைபெறும்.
அமெரிக்காவில் அதிபராக பதவியேற்பவர் பைபிள் மீது உறுதிமொழி ஏற்பது வழக்கம்.
2017 ஆம் ஆண்டு டொனால் டிரம்ப் பதவியேற்ற போது, 1861-ல் ஆபிரகாம் லிங்கன் உறுதிமொழி ஏற்ற பைபிள் மற்றும் தனது அம்மா Mary Anne MacLeod Trump கொடுத்த பைபிள் மீதும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
இப்போதும் அதன்படியே இரண்டு பைபிள்களை வைத்து உறுதிமொழி ஏற்பார் என கூறப்படுகிறது.
வழக்கமாக வாஷிங்டன் நாடாளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா திறந்த வெளியில் கோலாகலமாக நடைபெறும். ஆனால் இப்போது திறந்த வெளிக்கு பதிலாக அங்குள்ள Capital One Arena மைதானத்தில் நடைபெறுகிறது. மோசமான வானிலை, அதாவது அதிகமான பனிப்பொழிவு காரணமாக பதவியேற்பில் மாற்றம் செய்திருப்பதாக டிரம்ப் சொல்லியிருக்கிறார்.
வாஷிங்டன் டிசியில் மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதில் மக்கள் சிரமப்படக்கூடாது என கூறியிருக்கிறார் டிரம்ப். டிரம்ப் பதவியேற்பில் பங்கேற்க 2 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்கள் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க வரலாற்றில் 40 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்ப் பதவியேற்பு விழா திறந்த வெளியில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக 1985 ஆம் ஆண்டு ரொனால்ட் ரீகனின் பதவியேற்பு விழாவும் மோசமான வானிலையால் மூடிய மைதானத்தில் நடைபெற்றது.
அதிபர் பதவி ஏற்புக்கும், பனிப்பொழிவுக்கும் ஒரு மோசமான வரலாற்று கதையும் அமெரிக்காவில் சுற்றுகிறது.
1841 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் வில்லியம் ஹென்றி ஹாரிசன் கடுமையான பனிப்பொழிவின் போது திறந்த வெளியில் பதவியேற்றார். விழாவின் போது அவருக்கு சளி இருந்ததாக பேசப்பட்டது. இரண்டு மணி நேரம் பதவியேற்பு உரை நிகழ்த்தியவர் கோட் மற்றும் தொப்பி எதுவும் அணியவில்லை. தொடர்ச்சியாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட வில்லியம் ஹென்றி, அதிபரான ஒரு மாதத்திலேயே உயிரிழந்தார் என அமெரிக்க வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில்... டிரம்ப் பதவியேற்பு இடம், மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.