அரசு தேர்வர்களை அதிரவைத்த TNPSC முறைகேடு வழக்கு - மதுரை ஐகோர்ட் முடிவு

Update: 2025-07-25 02:53 GMT

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில், ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளது.

இதுதொடர்பாக, மதுரை மேலூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், இந்த வழக்கில் கீழ்நிலை அதிகாரிகள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயரதிகாரிகள் யாரும் வழக்கில் சேர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

உயர் அதிகாரிகளின் ஆதரவு இல்லாமல் இந்த மோசடி நடைபெற்றிருக்காது என்றும் அவர் குறிப்பிடிருந்தார்.

எனவே, இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும், எதிர்காலத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க மாநிலம் முழுவதும் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையங்களை கண்காணிக்க குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டது என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மனு மீது வேறு உத்தரவு பிறப்பிக்கவேண்டிய தேவையில்லை என குறிப்பிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்