புதிய பதவி வழங்கப்படவில்லை என்பதால் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிருப்தியில் இருந்ததாகவும், அவரை அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நேரில் சந்தித்து சமாதானம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை அக்கரையில் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் டெல்லியில் நடந்த பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை தவிர்த்து வந்த அண்ணாமலை, தற்போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தையும் தவிர்க்கும் முடிவில் இருந்தார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பி.எல்.சந்தோஷ் ஆலோசனை தொடங்கும் முன்பே அக்கரையில் இருந்து பனையூர் சென்று அண்ணாமலையின் இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின் தனக்கு முக்கியப் பதவிகள் இதுவரை வழங்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது..
அண்ணாமலையின் கருத்துகளை முழுவதுமாக கேட்டறிந்த பி.எல்.சந்தோஷ் அது குறித்து தேசியத் தலைமையிடம் பேசித் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.. இதில் சமாதானம் அடைந்த அண்ணாமலை பிற்பகலில் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்து உரையாற்றினார். மேலும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்புகளையும் அவரே அறிவித்தார்.. இதன் மூலமாக பாஜக தலைமை, அண்ணாமலையை தற்காலிகமாக சமாதானம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.