யுனானி மருத்துவர்கள் கைது..! போராட்டத்தில் குதித்த இஸ்லாமிய இயக்கத்தினர்.. ஆம்பூரில் பரபரப்பு
ஆம்பூரில் யுனானி மருத்துவர், ஆங்கில மருத்துவம் பார்த்தாக எழுந்த புகாரை தொடர்ந்து, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இஸ்லாமிய இயக்கத்தினர் காவல்நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் முறையாக மருத்துவ பட்டபடிப்பு பயிலாமல் சிலர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து, மோட்டு கொல்லை பகுதியைச் சேர்ந்த யுனானி மருத்துவர் அல்தாப் ,மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேதிக் மருத்துவர் சபியுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களை உடனடியாக விடுவிக்க கோரி அவர்களின் உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், நேதாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் யுனானி மருத்துவரான அல்தாபை போலீசார் தற்காலிகமாக விடுவித்தனர். முறையாக மருத்துவம் படிக்காமல் ஆயுர்வேதம் சம்பந்தப்பட்ட மருத்துவ பொருட்கள் மற்றும் ஆங்கில மருத்துவ பொருட்களை நோயாளிகளுக்கு பரிந்துரைத்த சபியுல்லா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.