வறுமையால் கிட்னியை விற்க சென்றவர் நேரில் கண்ட காட்சி - நாட்டை உலுக்கிய அந்த வாக்குமூலம்

Update: 2024-05-27 10:38 GMT

வறுமையால் கிட்னியை விற்க சென்றவர் நேரில் கண்ட காட்சி - நாட்டை உலுக்கிய அந்த வாக்குமூலம்

தமிழகத்தில் தொடங்கிய விசாரணை

ரத்த வேட்டையாடும் சர்வதேச மாஃபியா

நாட்டை அதிரவைத்த உடல் உறுப்புகள் கடத்தல் விவகாரத்தில், வழக்கு விசாரணையை தமிழகத்தில் இருந்து தொடங்கி இருக்கிறது விசாரணைக் குழு. இது குறித்தான ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம் விரிவாக...

கேரளாவில் இருந்து சிறுநீரகம், கல்லீரல் உட்பட பல உடல் உறுப்புகள் ஈரான் நாட்டுக்கு கடத்தப்படுவதாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு சில நாட்கள் முன் தகவல் கிடைத்தது...

தகவலை உடனே கேரள போலீசாருக்கு பரிமாறி அலெர்ட் செய்த அதிகாரிகள், திருச்சூரை சேர்ந்த சபித் நாசர் என்பவரை கொச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்....

விசாரணையில், சர்வதேச மாஃபியா கும்பலுடன் சேர்ந்து, உடல் உறுப்புகளுக்காக சபித் நாசர் ஆட்கடத்தலில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

பண வறுமையால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தன் சிறுநீரகத்தை விற்க திட்டமிட்ட சபித் நாசர், அதற்காக ஐதரபாத் சென்ற நிலையில், அங்கு உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் தொழிலையும், அதன் மூலம் பணமழையில் நனைந்து வரும் மாஃபியா கும்பலையும் கண்டு திகைத்து போயிருக்கிறார்...

தொடர்ந்து, அந்த கும்பலுடன் தன்னை ஐக்கியப் படுத்தி கொண்ட சபித் நாசர், தன்னை போலவே... பணக்கஷ்டத்தில் இருப்பவர்களை தேடித் தேடித் கண்டுபிடித்து, அவர்களை உடல் உறுப்பு தானத்துக்காக பணத்தாசை காட்டி மூளைச் சலைவை செய்தது தெரியவந்தது...

தொடர்ந்து வலையில் விழுந்தவர்களை போலி ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் மூலம் ஈரான் நாட்டுக்கு அனுப்பி வைத்த சபித் நாசர், அவர்களின் உடல் உறுப்புகளை விற்று பணம் சம்பாதித்து வந்திருக்கிறார்...

இவ்வாறு கடந்த 3 வருடங்களில், தமிழ்நாடு, கேரளா என நாட்டின் பல பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை ஈரான், குவைத், இலங்கை போன்ற நாடுகளுக்கு கடத்திய கும்பல்... அவர்களின் உடல் உறுப்புகளை விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்கிறது...

தொடர்ந்து இது குறித்து விசாரிக்க குழு அமைத்து உத்தரவிடப்பட்ட நிலையில், விசாரணைக் குழு தங்களின் விசாரணையை துவங்கிய அடுத்த கணமே, கேரளாவின் பாலாரி வட்டம் எத்தலா பகுதியை சேர்ந்த சஜித் ஷியாம் என்பவரை கைது செய்தது...

இந்த உடல் உறுப்புகள் கடத்தலில் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் சஜித் தான் கவனித்து வந்ததாக சொல்லப்படுகிறது...

தொடர்ந்து, சபித்திடம் விசாரணையை தொடங்கியிருக்கும் விசாரணைக் குழு, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடல் உறுப்புகள் பெற்றவர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளது...

இதனிடையே, ஒரு எஸ்.ஐ தலைமையிலான குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கியிருக்கும் அதிகாரிகள், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டுபிடித்து வாக்குமூலம் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

இந்த வழக்கில், சபித் நாசர், சஜித் ஷியாமை தொடர்ந்து கொச்சியை சேர்ந்த மது என்பவரும் முக்கிய மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவர, ஈரானில் இருக்கும் அவரை கேரள அழைத்து வருவதற்கான முயற்சிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்...

இந்த அனைத்து சம்பவத்திற்கும் கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனை உதவி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து, இன்னும் பல அதிர்ச்சிகர தகவல்கள் இந்த விசாரணையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது....

Tags:    

மேலும் செய்திகள்