பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷமா?.. ஜாதக பொருத்தம் கேட்ட உ.பி. ஐகோர்ட் - உச்சக்கட்ட டென்ஷனில் உச்ச நீதிமன்றம்

Update: 2023-06-06 05:33 GMT

பெண்ணிடம் நெருங்கி பழகி விட்டு செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி கழற்றிவிட்ட பேராசிரியர் வழக்கில் ஜாதக பொருத்தம் கேட்ட நீதிமன்றத்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

டெல்லி அலகாபாத் பல்கலை கழக பேராசிரியர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாகக கூறி பெண் ஒருவருடன் நெருங்கி பழகிய பின்பு திருமணம் செய்து கொள்ள மறுத்துளார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவே அவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் பெண்ணை காதலித்தது உண்மை தான் ஆனால் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் குடும்பத்திற்கு அழிவு ஏற்படும் என்ற அச்சத்தால் திருமண செய்து கொள்ள மறுத்ததாக கூறியிருக்கிறார்..

பேராசிரியரின் விளக்கத்தை கேட்ட அலகாபாத் உயர் நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு உண்மையில் தோஷம் இருக்கிறதா? என்பதைக் கண்டறிந்து ஒரு வாரத்தில் சீலிடப்பட்ட கவரில் அறிக்கையைத் தாக்கல் செய்ய லக்னோ பல்கலைக்கழக ஜோதிடத் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது..

இந்த நிலையில் பேராசிரியர் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் நேரடியாகத் தலையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அதன் படி, நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் பங்கஜ் மிட்டல் அடங்கிய 2 பேர் அமர்வு வழக்கை மீண்டும் விசாரித்தது.

வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் கவலையளிக்கிறது என்றும், அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்..

பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜய்குமார் சிங், திருமணம் செய்து கொள்ள ஜாதகம் காரணம் என்று கூறியதால் இருதரப்பு ஒப்புதலின் பேரிலேயே அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தாக தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், "ஜாதகம் பார்ப்பது எல்லாம் ஒருவரது தனிப்பட்ட உரிமை. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

இந்த வழக்கில் ஜாதகத்தைப் பார்த்து எதற்காக அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னார்கள் என்று உண்மையாகவே புரியவில்லை" என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஜாதக சமர்ப்பிப்பு உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், இது குறித்து விளக்கம் அளிக்க இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்