இலங்கை அரசியலில் முக்கியமானதாக கருதப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

Update: 2018-10-30 13:34 GMT
கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என ஒரு கூட்டணியை உருவாக்கி ராஜபக்சேவுக்கு எதிராக களம் இறங்கினார் ரணில் விகரமசிங்கே. அந்நாட்டில் எதிர் எதிர் கொள்கைகளை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்து ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டது. இவர்கள் ஏற்படுத்திய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் வடக்கு மகாணத்தில் செல்வாக்கு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவை இணைந்து போட்டியிட்டன. இந்த வலுவான கூட்டணி வெற்றி பெற்றது. ஜனாதிபதியாக மைதிரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 106 இடங்களை பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 இடங்களில் வெற்றி பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 5 இடங்களிலும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 1 இடத்தையும் கைப்பற்றியது. ராஜபக்சே தலைமையில் போட்டியிட்ட அணி 95 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இது தவிர சிங்கள இனவாத கட்சியான ஜனதாவி முக்தி பெரமுணா 6 இடங்களை பெற்றது. 

தற்போது பிரதமராக பதவி ஏற்றுள்ள ராஜபக்சேவுக்கு தனி பெரும்பான்மை பெற ஏற்கனவே உள்ள 95 இடங்களை சேர்த்து இன்னும் 18 எம்.பிக்கள் ஆதரவு தேவை. எனவே 16 இடங்களை வைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை கோரினார் ராஜபக்சே. இந்த நிலையில் அந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இன்று ராஜபக்சேவை சந்தித்தார். அப்போது போர் கைதிகளை விடுவிப்பது ராணுவத்தை வடக்கு மகாணத்திலிருந்து விலக்கிக்கொள்வது மற்றும் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடமே ஒப்படைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிகிறது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால் தாங்கள் ஆதரவு தர தயார் எனவும் அவர் ராஜபக்சேவிடம் தெரிவித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு மாகாண தமிழர்களை பொறுத்தவரை ஏற்கனவே ராஜபக்சேவை வீழ்த்தி ரணிலை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்தனர். இருந்த போதும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் ரணிலோ,  ராஜபக்சேவோ,  எழுத்துப்பூர்வமாக யார் உறுதிமொழி தருகிறார்களோ அவர்களை ஆதரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்