பள்ளி நண்பரே காலை வாரிய சம்பவம்... நடுங்கி நின்ற பட்டாசு வியாபாரி... விசாரணையில் ஷாக்

Update: 2024-05-10 10:16 GMT

வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி பட்டாசு வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் திமுக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்...

சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜ் பட்டாசு விற்பனை ஏஜென்ட் தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டிலிருந்த போது காலை வீட்டிற்கு வந்த இருவர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டு, முறையாக வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்ததாக சவுந்தர்ராஜை மிரட்டியுள்ளனர். நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்க 50 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளனர்... சவுந்தர்ராஜ் தனது உறவினர் மூலம் 10 லட்ச ரூபாய் பணத்தைத் தந்துள்ளார். மீதி பணத்தையும் கொடுக்குமாறு சவுந்தர்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இந்நிலையில், சவுந்தர்ராஜ் சிவகாசி வட்டார காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்த நிலையில், போலி அதிகாரிகளாக நடித்த சாத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், சுப்பிரமணி, கார் ஓட்டுநர் மகேஷ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்திய போது, தாயில்பட்டியை சேர்ந்த திமுக ஒன்றிய பிரதிநிதி கருப்பசாமி என்பவர் கொடுத்த திட்டத்தின் படி அவர்கள் மோசடி சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. சுரேஷ், சுப்பிரமணி, மகேஷ், கருப்பசாமி ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். சவுந்தர்ராஜின் பள்ளி தோழரான கருப்பசாமி ஒரு ஆண்டுக்கு முன்னரே வருமான வரித்துறை சோதனை நடக்கவுள்ளதாகவும், 18 லட்ச ரூபாய் தந்தால் விசாரணையில் இருந்து தப்பிக்கலாம் எனவும் கூறி சவுந்தர்ராஜை மிரட்டியுள்ளார். அவர் மறுத்ததால் ஆட்களை வைத்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்