நூற்றாண்டு அவலத்தை நிறுத்திய `பெருச்சாளி' "மலக்குழி மரணங்களுக்கு புல்ஸ்டாப்..!"மாற்றி யோசித்த சென்னை

Update: 2024-05-24 17:55 GMT

சென்னையில் பாதாள சாக்கடை கழிவுநீர் அடைப்புகளைச் சுத்தப்படுத்தி அகற்றுவதற்கு பேண்டிகூட் ரோபோ களமிறக்கப்பட்டுள்ளன. விஷவாயு கசிவால் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோவது இனியாவது தடுக்கப்படுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், நவீன ரோபோவின் செயல்பாடுகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு...

டிஜிட்டல் இந்தியா என பெருமை பேசினாலும், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் இன்னும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. முறையான பாதுகாப்பு உபகரணங்களின்றி துப்புரவு பணியை மேற்கொள்ளும்போது, விஷவாயு தாக்கி விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், கழிவுநீர் அகற்ற நவீன ரோபோட்டிக் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் தினமும் 75 கோடி லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படும் நிலையில், இதற்காக 5, 500 கிலோ மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், 500-க்கும் மேற்பட்ட கழிவு நீர் அடைப்பு அகற்றும் இயந்திர வாகனங்களும் உள்ளன.

கோடையில் குடிநீர் பயன்பாடு அதிகரிப்பதால், கழிவுநீர் வெளியேற்றமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கழிவுநீர் அடைப்பை சரி செய்வதற்காக ரிமோட் கன்ட்ரோலில் இயக்கப்படும் பேண்டி கூட் என்ற நவீன ரோபோட் இயந்திரங்கள் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பேண்டிகூட் என்பதற்கு தமிழில் பெருச்சாளி என்று பொருள். எந்த விதமான சந்துபொந்துகளிலும் நுழைந்து வந்துவிடும் பெருச்சாளியைப் போன்ற செயல்பாட்டைக் கொண்டது இந்த ரோபோ. தனது இயந்திரக் கால்களை நீட்டி மடக்கக்கூடியது. மனிதர்களைப் போன்றே சாக்கடைக் குழிக்குள் இறங்கி அடைப்புகளை சுத்தம்செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் சிறிய கணினித் திரையில் கண்காணிக்கப்படுகிறது.

முதற்கட்டமாக சென்னையில் அடையாறு, வள்ளுவர் கோட்டம், கொளத்தூர் ஆகிய இடங்களில் தலா ஒரு ரோபோட்டிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது என்றும், இந்த வகை நவீன இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள நான்கு கேமராக்கள் கழிவுகள் எங்கு தேங்கியுள்ளது என்பதை கண்காணித்து மிக எளிதாக தங்களால் அகற்ற முடிவதாக கூறுகின்றனர் கழிவுநீர் அகற்றுவாரிய களப்பணியாளர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்