இன்ஸ்டா யூசர்களே உஷார்.. ஸ்டேட்டஸில் இப்படியும் நடக்கும் - அடிக்கும் அபாய மணி

Update: 2024-05-07 08:57 GMT

இன்ஸ்டா யூசர்களே உஷார்.. ஸ்டேட்டஸில் இப்படியும் நடக்கும் - அடிக்கும் அபாய மணி

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீண்ட நாள்களாக திறக்காமல் இருப்பவர்களா நீங்கள் ?... சைபர் கிரைம் மோசடி கும்பல் உங்களை குறி வைத்து நூதன முறையில் மோசடி திட்டம் ஒன்றை அரங்கேற்றி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

இன்றைய உலகில் இன்ஸ்டா, பேஸ்புக், வாட்ஸ் அப் என அனைவரின் வாழ்க்கையையும் சமூகவலைதள கணக்குகள் ஆக்கிரமித்திருக்கின்றன...

இதனால், பலரின் வாழ்க்கை... வழிமாறி போவதே தெரியாமல் செல்லும் நீரின் போக்கில் தடம் புரண்டு கொண்டிருக்கிறது...

இதையும் தாண்டி சிலர்... இயக்குநர் லோகேஷ் கனகராஜை போல தன் கேரியரில் கவனம் செலுத்தப் போவதாக கூறி தங்களின் சமூக வலைதள கணக்குகளை மூடி விட்டு திடீரென சில மாதங்கள் காணாமல் போவார்கள்....

இவ்வாறு, பலர் மாதக்கணக்கில் தங்களின் அக்கவுண்டை திறக்காமல் வைத்திருப்பதையும், உயிரிழந்த சிலரின் அக்கவுண்டுகள் தற்போது வரை மூடப்படாமல் இருப்பதையும் தேடி தேடி சேகரிக்கும் மோசடி கும்பல், அந்த அக்கவுண்ட்டுகளை ஹேக் செய்து மோசடி செய்கின்றனர்...

இதில் மறைந்த பிரபலம் ஒருவரை மீண்டும் பலிகடாவாக்கி அவர் பெயரில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மோசடி சம்பவமே சைபர் கிரைம் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சின்னத்திரை நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டான்சர் ரமேஷ்... இன்ஸ்டாவில் 65 ஆயிரத்திற்கும் மேலான ரசிகர்களை கொண்டிருந்த இவர், நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.... இந்நிலையில், கடந்தாண்டு ஜனவரி மாதம் குடும்ப பிரச்சினை காரணமாக டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டான்சர் ரமேஷின் மறைவுக்கு பிறகு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு மூடப்படாததால், அந்த அக்கவுண்ட்டை சைபர் கிரைம் மோசடி கும்பல் ஹேக் செய்து பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது...

ரமேஷின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆன்லைன் டிரேடிங் குறித்தான ஸ்டேட்டஸ்கள் வைத்து கும்பல் மோசடி செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது...

நடிகரும், பிரபல நடன இயக்குநருமான பிரபுதேவாவின் புகைப்படத்தை, ரமேஷ் ப்ரொபைல் பிக்சராக வைத்திருப்பதால், அதை பார்த்து பலர் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்வார்கள் என கும்பல் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது....

இது போல், இறந்தவர்கள் மற்றும் நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பவர்களின் சமூக வலைதள கணக்குகளை இந்த கும்பல் ஹேக் செய்வதாகவும், அதன் மூலம் ஆன்லைன் டிரேடிங் குறித்து விளம்பரம் செய்து மோசடி செய்து வருவதாகவும் கூறும் போலீசார், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்