பொள்ளாச்சி வழக்கு - 6 மாதங்களில் முடிக்க உத்தரவு

பொள்ளாச்சி வழக்கை ஆறு மாதங்களில் முடிக்க கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

Update: 2021-08-11 08:11 GMT
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வரும் நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரோன் பால், வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு, பொள்ளாச்சி நகர அ.தி.மு.க, மாணவரணிச் செயலாளராக இருந்த அருளானந்தம்  ஆகியோரும் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். 

இதனிடையே சிறையில் இருக்கும் அருளானந்தம் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனுவை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். அப்போது ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களை கீழ்நீதிமன்றம் கேட்டு வருவதாகவும், ஆட்பற்றாக்குறை காரணமாக விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தமிழக காவல்துறையை தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்தில் ஒரு அதிகாரியை நியமித்து உதவ தயார் என்றும் உறுதி அளித்தார். 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தண்டபாணி, அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையை தினந்தோறும் விசாரித்து, ஆறு மாதங்களில் முடிக்க கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, 

மேலும் இந்த வழக்கில் சிபிஐ-க்கு உதவும் வகையில் சிபிசிஐடி - எஸ்.பி முத்தரசியை நியமித்தும் உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்