கொரோனா கட்டுப்பாடுகள் பயனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு - தமிழக அரசு

கொரோனா கட்டுப்பாடுகள் பயனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

Update: 2021-04-09 12:11 GMT
கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமருடன் தமிழகம் சார்பில் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து தினசரி சராசரியாக 3900 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது மார்ச் 16 முதல் இதுவரை 2 கோடியே 88 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த 31 லட்சத்தி 26 ஆயிரத்தி 36 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 3 லட்சத்தி 61 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 34 லட்சத்தி 87 ஆயிரத்தி 36 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொற்றை கட்டுப்படுத்த 3,000 காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. வருகிற 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா என அறிவிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 95 புள்ளி ஐந்து ஐந்து சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாகவும், இறப்பு விகிதம் 1 புள்ளி நான்கு ஒன்று என குறைவாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நோயை கட்டுப்படுத்த தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இவை பலனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்