குரூப்-4 முறைகேடு தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது
குரூப்-4 முறைகேடு தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.;
சர்ச்சையில் சிக்கிய ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை சிபிசிஐடி தயாரித்தது. அதன் அடிப்படையில் நிதீஷ்குமார், ரமேஷ் உள்பட 3 பேர் கைதாகி இருப்பதாக சிபிசிஐடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை தவிர, ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் இருவர் உள்பட 10 பேர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல், முதல் ஐம்பது இடத்தில் இடம்பெற்ற கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுகிராத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிவராஜ் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறி நெல்லை மாவட்டம் விஜயாபதி கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு மாணவனிடம் 12 லட்சம் பணம் பெற்று ஐயப்பன் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அத்துடன், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 11 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. முறைகேட்டில் சிக்கிய 99 பேரை கைது செய்யும் வரை சிபிசிஐடியின் தேடுதல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.