எங்கே இருக்கிறார் நித்தியானந்தா..? - தினமும் யூ ட்யூபில் பக்தர்களுக்கு அருளாசி
எந்த பக்கம் திரும்பினாலும் நித்தியானந்தா மீதான புகார்கள், ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நேரம் தவறாமல் பக்தர்களுக்கு யூ ட்யூபில் தரிசனம் தந்து வருகிறார் நித்தியானந்தா;
ஆட்கடத்தல் பண மோசடி பாலியல் புகார்கள் என தொடர் புகார்கள் நித்தியானந்தாவின் மீது அணிவகுத்து நிற்கின்றன ஆனால் எதற்கும் அசராத நித்யானந்தா காலபைரவரின் துணையால் மீண்டு வருவேன் என துணிச்சலாகவே பதிலளித்தார். குஜராத் ஆசிரம சர்ச்சைகள் ஒருபுறம் பிடதி ஆசிரம குழந்தைகள் என்ன ஆனார்கள் என்ற கேள்வி மறுபுறம் என ஏரியாவே அல்லோல கல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது. நித்தியானந்தா எங்கே என யாராலும் கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு ஒரு பாதுகாப்பு அரணுக்குள் இருக்கிறார் அவர். ஆசிரமத்தில் உள்ள மூத்த நிர்வாகிகள் மட்டுமே தொடர்பு கொள்ளும் நிலையில் இருக்கும் நித்தி, வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த சம்பவமும் நடக்காதது போன்ற தோரணையில் இருக்கும் நித்தி தினமும் சரியாக மாலை 7 மணிக்கு யூ ட்யூபில் அவதரிக்கிறார். உலக அளவில் உள்ள பக்தர்களை கவர்வதற்காக ஆங்கிலத்தில் சத்சங்கம் செய்யும் நித்தி, அவ்வப்போது நகைச்சுவையான பேச்சாலும் அசரடிக்கிறார். தான் ஒரு பரமசிவன் என்றும், தன் பக்தைகளை எல்லாம் பார்வதி தேவி என்றும், சக்தி என்றும் அன்போடு அழைப்பது நித்தியானந்தாவின் ஸ்டைல்.. தன்னை நம்பி வரும் சக்திகளுக்கு எல்லாம் எப்போதும் அரணாக இருப்பேன் என்றும் பேசி அசத்துகிறார் இவர். குறைந்தது ஒரு மணி நேரம் தொடங்கி 4 மணி நேரம் வரை ஆன்லைனில் சத்சங்கம் செய்யும் நித்தி, எங்கு இருந்து இதை பதிவு செய்து வெளியிடுகிறார் என்பது இன்னமும் புலப்படவில்லை.