இளைஞரை கடத்தி நகைகள், சொகுசு கார் பறிப்பு - புதையலில் பங்கு கேட்டு 2 போலீசார் கடத்தியதாக புகார்
குளச்சல் அருகே தங்க புதையலில் பங்கு கேட்டு இளைஞரை கடத்தி 2 சொகுசு கார்களை பறித்து சென்ற கும்பலுடன் போலீசாருக்கு தொடர்பு உள்ளதா என்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தக்காளிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெர்லின். இவர், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கருங்கல் காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலர் ஆகியோர், ரவுடி கும்பலுடன் வந்து தன்னை மிரட்டி நாகர்கோவில் - நெல்லை நெடுஞ்சாலையில் ஒரு பகுதிக்கு கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜே.சி.பி. ஆபரேட்டராக பணிபுரியும் போது கிடைத்த தங்க புதையலை கொண்டு தான் சொகுசு கார் மற்றும் ஜே.சி.பி வாங்கியதாக புகார் வந்துள்ளதாக கூறி புதையலில் பங்கு தந்தால் வழக்கை முடித்து கொள்வோம் என மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பங்கு பணத்திற்காக தனது நகைகள் மற்றும் சொகுசு கார்கள் இரண்டையும் பறித்து தன்னை வழியில் இறக்கி விட்டு சென்று விட்டதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தனிப்படை அமைத்த போலீசார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஜெர்லினை பிடித்து விசாரித்ததை ஒப்புக்கொண்ட இருவரும், தங்களுக்கும் கடத்தலுக்கும் தொடர்பில்லை என மறுத்துள்ளனர். இதையடுத்து ஜெர்லினுக்கு உண்மையில் புதையல் கிடைத்ததா என்றும், ஜெர்லினை கடத்திய ரவுடி கும்பல் யார் எனவும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.