ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி வேதாந்தா நிறுவனம் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்ய தமிழக அரசு கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-20 21:38 GMT
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே என இவ்வழக்கில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தமிழ்நாடு  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1994ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனம்,  ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆலைக்குள் கழிவுகளை  தேக்கி வைத்ததால் 2013 ஆம் ஆண்டு விஷ வாயு கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கான உரிமத்தை புதிப்பிக்கக்கோரி விண்ணப்பித்ததால், நேரில் ஆய்வு செய்த போது விதிமுறைகள் மீறல் காரணமாக  கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், ஆலையை தொடர்ந்து இயக்க கூடாது என 2018 ஏப்ரலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை மீறி உற்பத்தி நடவடிக்கையில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டதால் ஆலையை மூடவும், மின் இணைப்பை துண்டிக்கவும் ஆணையிட்டு 2018 ம் ஆண்டு மே 28 ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஏற்படுத்திய மாசுவை அரசோ, நீதிமன்றமோ கண்மூடி வேடிக்கை பார்க்க கூடாது என்றும் , ஆலை மாசு காரணமாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் வந்த நிலையில் ,  ஆலை மூடிய பின்னர் நிலத்தடி நீரின் தரம் மேம்பட்டு, காற்று மாசு குறைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டது.ஸ்டெர்லைட் ஆலை ஆண்டுக்கு  2 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ள நிலையில், அந்நிறுவனத்துக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறுப்படுவது அபத்தமானது என்றும்,  நிரந்தரமாக மூட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்