நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பள்ளி மாணவன்

இருள் நீங்குவதை அறிந்து கோழிகள் கூவுவது போல், நினைத்ததை செயல்படுத்த வயது தடை அல்ல என்பதை பள்ளி சிறுவன் ஒருவன் சாதித்து காட்டியுள்ளான்.

Update: 2019-06-06 03:10 GMT
காங்கேயம் - சென்னிமலை சாலையில் உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் வசித்துவரும் நாச்சிமுத்து -  ஜெயலட்சுமி தம்பதியரின் மகன் பொன் வெங்கடாசலபதி. தாய் தந்தை இருவருமே தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் நிலையில், பொன் வெங்கடாசலபதி நெய்க்காரன்பாளையம் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி நேரத்தை தவிர்த்து மீதி பொழுதை கடக்க சிறுவர்கள் விளையாட்டை நாடிக்கொண்டிருக்க, பொன் வெங்கடாசலபதி தனது சிறுவயது ஆசையை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கினான். தனது தாத்தா கோழி வளர்ப்பில் ஈடுபட்டதால் சிறுவயது முதலே தனக்கும் கோழி வளர்ப்பில் ஈடுபாடு வந்ததாக பொன் வெங்கடாசலபதி கூறுகிறான்.

கடந்தாண்டு தனது குடும்ப நண்பர்கள் சிலரின் உதவியுடன் முதலில் 10 கோழிகளை கொண்டு பெரிய கனவுகளுடன் தனது சிறிய பண்ணையை ஆரம்பித்துள்ளான். கோழிகளை எவ்வாறு பாதுகாத்து ஆரோக்கியமாக வளர்க்கவேண்டும், நோய்வாய்பட்டால் குணப்படுத்தும் முறைகள் உள்ளிட்டவற்றை இணையத்தில் தேடி தேடி படித்து அவற்றை பின்பற்றியுள்ளான். நாட்டு கோழி, கிராஜா கோழி, கின்னி கோழி, வாத்து ஆகிய வகைகளை சிறுவன் வளர்த்து வருகின்றான். கோழிகளின் பெருக்கம் அதிகரித்ததை தொடர்ந்து அவற்றை விற்பனை செய்வதற்கு சாலை ஓரங்களில் விளம்பர பலகை வைத்துள்ளான்.

இதை பார்த்து ஆர்வமுடன் கோழிகள் மற்றும் முட்டைகள் வாங்க வரும் பொதுமக்கள், உரிமையாளரான சிறுவனை பார்த்து ஆச்சரியம் அடைகின்றனர். சிறுவன் கோழிகளை கையாளும் விதத்தை பார்த்து வியந்து மற்றவர்களிடமும் பெருமையாக தெரிவிக்கின்றனர். இறைச்சி கடைகளில் கலப்பட கோழிகள் தான் அதிகளவு விற்பனை நடைபெறும் நிலையில், தரமான நாட்டுக்கோழிகளை குறைந்த விலைக்கு சிறுவன் விற்பனை செய்கின்றான். அதில் வரும் லாபத்தில் மீண்டும் கோழிகள் வாங்கி வளர்த்து வருகின்றான்.

செல்போன் விளையாட்டுகளில் மூழ்கி கிடக்கும் சிறுபிள்ளைகள் மத்தியில் தனது கனவை நோக்கி சென்று அடைந்துள்ள பொன் வெங்கடாசலபதி, சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளான். சிறுவயதிலேயே, ஊர்மக்கள் எல்லோரும் ஏறெடுத்து பார்க்கும் மனிதனாக  மகன் வளர்ச்சி அடைந்துள்ளது, பெற்றோரை பெருமையில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்