தொழிலதிபர்களை கடத்தி பணம் பறித்து வந்த கும்பல் - ஒரு ஆண்டுக்கு பின் கடத்தல் கும்பலை பிடித்த போலீசார்
பண்ருட்டி பகுதியில் தொழிலதிபர்களை கடத்தி பணம் பறித்து வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.;
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர், தொழிலதிபர் விஜயரங்கன். 2 நாட்களுக்கு முன் இவரது செல்போனுக்கு மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, கடந்த ஆண்டை போல, மீண்டும் கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள், 80 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த விஜய ரங்கன் உடனடியாக போலீஸில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை விஜய ரங்கனிடம் பணம் பெற்று சென்ற மாயவன் என்ற முந்திரி வியாபாரியை, மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றுள்ளது. மாயவனிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாயை பறித்துகொண்டு அவரை, நடுரோட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். உடனடியாக தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்ட போலீசார், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அருகே சொகுசு காரில் இருந்த 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். மாயவனை கடத்தி பணம் பறித்ததையும், கடந்த ஆண்டு விஜய ரங்கனை கடத்தியதையும் அந்த கும்பல் ஒப்புக் கொண்டது. இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.