அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன?
நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.;
நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
* தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர், தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசுகள் புதிய நலத் திட்டங்களை அறிவிக்க கூடாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ள திட்டங்களுக்கு தடையில்லை.
* அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக் கூடாது
* பதவி உயர்வு அளிக்கக் கூடாது என்பது விதி. வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்
* அரசு விழாக்கள் நடத்த கூடாது. அமைச்சர்கள் என்ற முறையில் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.
* அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது
* பொது மைதானங்கள், ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்க கூடாது
* வாக்குச் சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை
* வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகவோ இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட இடங்களுக்கு அமைச்சர்கள் செல்லலாம்
* சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடக் கூடாது
* கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது
* மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது
* மற்ற கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கக் கூடாது
* அனுமதி பெறாமல் தனியார் இடங்களைப் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது
* தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாளுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்
* வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச் சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது