கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட எச்.ஐ.வி ரத்தம், முறையான சிகிச்சை அளிக்க கோரும் தம்பதி

விருதுநகர் அருகே அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-26 07:07 GMT
சாத்தூரை சேர்ந்த கூலிதொழிலாளியின் மனைவி, 2-வது முறையாக கர்ப்பமடைந்துள்ளார். பரிசோதனைக்காக, கடந்த 3ஆம் தேதி அரசு மருத்துவமனைக்கு தனது மனைவியை அவர் அழைத்து சென்றுள்ளார். ரத்தசோகை இருப்பதாக கூறி, கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவர்கள் ரத்தம் ஏற்றியுள்ளனர். சில தினங்களில் அந்த பெண்ணுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.  

மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ரத்தப் பரிசோதனை செய்த போது, அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இடி போல் விழுந்த தகவலால் அந்த தம்பதி, சுக்கு நூறாக உடைந்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி, அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3 பேரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். எனினும், நம்பிச் சென்று மோசம் செய்யப்பட்டதால், அந்த இளம் தம்பதி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில், அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கூட்டு மருத்துவ சிகிச்சை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பிரசவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனைத்து ரத்த வங்கிகளிலும் உள்ள ரத்தத்தை மறுபரிசோதனை செய்யுமாறு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சம்பவம் நடந்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 ரத்த வங்கிகளிலும் மறுபரிசோதனை செய்ய மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்