மேகதாதுவில் அணை : பிரதமருக்கு முதல்வர் கடிதம்...
மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்விற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை திரும்ப பெறுமாறு பிரதமரை முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.;
* பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி இன்று எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது அணை திட்டம் குறித்த விரிவான ஆய்வறிக்கையை அளிக்குமாறு கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதியை சுட்டிக் காட்டியுள்ளார்.
* ஏற்கனவே, அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய நீர்வள அமைச்சகம் மற்றும் நீர்வள ஆணையத்துக்கு அறிவுறுத்துமாறு
கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபரில் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
* குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாக கர்நாடகா கூறினாலும், நாளடைவில் பாசன தேவைக்கு பயன்படுத்த தொடங்கும் என்பதை மத்திய அரசிடம் ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருப்பதாகவும் நீர்வள ஆணையத்தின் இந்த முடிவானது, தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கான அபாய எச்சரிக்கையாக அமைந்துள்ளது எனவும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
* இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி தலையிட்டு, மத்திய நீர்வள ஆணையத்தின் அனுமதியை திரும்பப் பெற வேண்டும் எனவும், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும், தனது கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.