மத மோதலை உருவாக்குமா, புஷ்கர விழா...?

தாமிரபரணி புஷ்கர விழா, மத மோதலை உருவாக்குமா? அந்த விழா நடக்குமா? என்ற குழப்பம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-09-20 19:13 GMT
தாமிரபரணி ஆற்றில் அக்டோபர் 12ம் தேதி முதல் 23 வரை புஷ்கர விழாவை நடத்த ஆன்மிக அமைப்புகள் அனுமதி கோரி இருந்தன. மனுக்களை பரிசீலித்த நெல்லை ஆட்சியர், குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச மண்டபம் மற்றும் படித்துறையில் விழா நடத்த அனுமதி மறுத்துள்ளார்.  

இந்த விழா தொடர்பாக அறநிலைய துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தபோது, அக்டோபர் மாதத்தில் தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கூடவே, வெள்ளத்தை தாண்டி, 'ஆகம விதி மீறல்' காரணமாகவும் அனுமதி மறுப்பு என கூறினர். 

இன்னொரு புறம், நெல்லை ஆட்சியர், அனுமதி மறுப்புக்கு மத மோதல் உருவாக வாய்ப்பு இருப்பதாக ஒரு காரணத்தை கூறியுள்ளார். இது தொடர்பான அவரது உத்தரவில், தைப்பூச மண்டபம் அருகில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இருப்பதாகவும்
அங்கு வரும் அனைத்து மத, இனம் சார்ந்த மக்கள் மற்றும் பக்தர்கள் இடையே தகராறு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.மேலும், கடந்த 1999ம் ஆண்டில் நடந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, தைப்பூச மண்டபம் அருகில் தான், 17 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாகவும்

பலரும் உயிர் நீத்த இடமானது, மத வழிபாடு நிகழ்ச்சி நடத்த உகந்தது அல்ல எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, தைப்பூச மண்டபம் அருகில், பாலம் கட்டும் பணிகளுக்கான கட்டுமான பொருட்கள் மற்றும் கனரக வாகனங்கள் இருப்பதையும் ஆட்சியர் தனது உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளார்.  

இதுபோல, நெல்லை தாமிரபரணி படித்துறையானது பல நூற்றாண்டு பழமையானது என்பதால், அதிகபட்சம் 80 பேர் மட்டுமே நீராட முடியும் எனவும் புஷ்கர விழாவில் கூடும், நூற்றுக்கணக்கான மக்களை அங்கு அனுமதிக்க முடியாது எனவும் ஆட்சியரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

தாமிரபரணி புஷ்கர விழாவை, தைப்பூச மண்டபம் மற்றும் படித்துறையில் நடத்துவதற்கு அனுமதி கேட்ட நிலையில் மாநகர காவல் ஆணையர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரியின் கடிதங்களை மேற்கோள் காட்டி நெல்லை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து, திட்டமிட்டபடி புஷ்கர விழா நடைபெறுமா அல்லது மற்ற இடங்களிலும் சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சினைகளை காரணம் காட்டி விழாவுக்கு அனுமதி மறுக்கப்படுமா என்ற கேள்வியும் குழப்பமும் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்