7 சதவீத அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு - கணக்கு தணிக்கை அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் 5 புள்ளி 6 லட்சம் ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-09-10 20:03 GMT
தமிழக அரசுக்கு சொந்தமான 71 புள்ளி 70 லட்சம் ஏக்கர் நிலத்தில், 5 புள்ளி 6 லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறையின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது . 

இது மொத்த நிலத்தில் 7 சதவீதம் எனவும் கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிரந்தர குடியிருப்பாக 65 ஆயிரத்து 383 ஏக்கர் நிலமும், நிரந்தர குடியிருப்பு இல்லாத வகையில் 34 ஆயிரத்து 199 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 

இதுபோல, தற்காலிக பயிர்கள் மற்றும் மரங்கள் மூலம் 3 லட்சத்து 47 ஆயிரத்து 287 ஏக்கரும், இதர பயன்பாடுகள் மூலம் 43 ஆயிரத்து 336 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. 

சென்னையில் மிக அதிகமாக 23 புள்ளி 9 சதவீத அரசு நிலங்களும், மிகக் குறைந்த அளவாக நெல்லை மாவட்டத்தில் 1 புள்ளி 24 சதவீத நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மேலும், நீர் நிலை புறம்போக்கு, மேய்ச்சல் நிலங்கள், சாலை, நத்தம், வனாந்திரம் என வகைப்படுத்தப்பட்ட 1 லட்சத்து 96 ஆயிரத்து 649 ஏக்கர் நிலங்கள் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதில், 49 சதவீதம் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எனவும் கூறப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்