பெட்ரோல் வாங்க புதுச்சேரிக்கு செல்லும் தமிழக மக்கள்

தமிழகத்தை காட்டிலும், பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருப்பதால் புதுச்சேரியை நோக்கி படையெடுக்கின்றனர் கடலூர் நகர மக்கள்.

Update: 2018-09-10 13:08 GMT
நாளுக்கு நாள் ஏறி வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆனால் கடலூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. காரணம் கடலூரை ஒட்டியுள்ள புதுச்சேரிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்திற்கான எரிபொருளை அங்கேயே நிரப்பி வருவது தான்.

தமிழகத்துடன் ஒப்பிடும் போது புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைவு என்பதால் இங்கு படையெடுத்து செல்லும் வாகன ஓட்டிகள் அதிகம். இன்றைய நிலவரப்படி கடலூரில் ஒரு லிட்டர்  பெட்ரோலின் விலை 85 ரூபாய் 81 காசுகளாக உள்ளது. ஆனால் அதுவே புதுச்சேரியில் 79 ரூபாய் 65 காசுகளாக உள்ளது. இதேபோல் டீசலின் விலையும் கடலூரை விட புதுச்சேரியில் குறைவு தான்.

இதனால் கடலூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுச்சேரிக்கு சென்று தங்கள் வாகனங்களை நிரப்பிச் செல்ல வாகன ஓட்டிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான வாகன ஓட்டிகள் புதுச்சேரியை நோக்கி செல்வதால் கடலூரில் உள்ள பெட்ரோல் பங்குகள் வெறிச்சோடிக் கிடக்கிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்