விநாயகர் சிலைகள் வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு

விநாயகர் சிலைகளை வைப்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

Update: 2018-09-04 13:23 GMT
விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் வைப்பதற்கும் அவற்றை கரைப்பதற்கும் 24 நிபந்தனைகளை விதித்து ஆகஸ்ட் 9ம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ஒரே அதிகாரியிடம் அனுமதி வாங்கும் வகையில், ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க முடியுமா என அரசு பதிலளிக்க நீதிபதி  உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ஒற்றை சாளர முறையில் விண்ணப்பங்களை பரிசீலித்து மூன்று நாட்களில்  முடிவெடுப்பதாகவும்

அதற்கு ஏதுவாக மாநகரங்களில் காவல் துணை ஆணையரையும், மாவட்டங்களில் துணை கண்காணிப்பாளரையும் அணுகி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இதையடுத்து, 5 நாட்கள் மட்டுமே சிலை வைத்திருக்க வேண்டும், பட்டா இடத்தில்தான் வைக்க வேண்டும், மாட்டு வண்டியில் சிலைகளை எடுத்துச் செல்லக் கூடாது போன்ற விதிமுறைகள் இருப்பதாகவும், இவற்றில் மாற்றம் கொண்டு வருமாறும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டடது. 

இவை அனைத்தையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி மகாதேவன், சிலை வைக்கும் இடங்களுக்கு தேவையான மின்சாரத்தை அருகில் இருக்கும் வீடு, வணிக நிறுவன ஒப்புதலுடன் எடுப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும் திருட்டு மின்சாரம் எடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்ததோடு, வழக்கின் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்