இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிப்பு

சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார்.

Update: 2018-08-05 11:11 GMT
* திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேசிய தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களும்  மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்து வருகின்றனர்.

* இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் நலம் குறித்து விசாரிப்பதற்காக இன்று மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

* அவரை விமானநிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்  , மற்றும் அமைச்சர்கள், முப்படை தளபதிகள், அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.



* விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன்  காரில், காவிரி மருத்துவமனைக்கு குடியரசுத் தலைவர் சென்றார். அங்கு கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் நான்காவது மாடிக்குச் சென்ற அவர், கருணாநிதியை நேரில் சந்தித்தார்.

* அங்கு மருத்துவர்களிடம்   கருணாநிதிக்கு அளித்து வரும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்  நலம் குறித்து விசாரித்தார். 



* தமிழக முன்னாள் முதலமைச்சரும், முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். 



* இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், கருணாநிதியை சென்னையில் சந்தித்ததாகவும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் தமிழில் தனித்தனியாக இரண்டு பதிவுகளை குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்