தேர்தலுக்கு பின் கண் சிவக்கும் ஈபிஎஸ்... பாயும் அதிமுக... ஷாக்கில் உறைந்த பாஜக

Update: 2024-05-05 06:44 GMT

தேர்தலுக்கு பின் கண் சிவக்கும் ஈபிஎஸ்

பாயும் அதிமுக... ஷாக்கில் உறைந்த பாஜக

ஜூன் 4 முடிவுக்கு முன்னே ரெடியான டார்கெட்

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு பாஜகவை அதிமுக கடுமையாக விளாசுவதற்கான பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு

தமிழகத்தில் ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாஜக...

இந்த கூட்டணி ஆரம்பம் முதல் கட்டாய திருமணம் என்றே விமர்சிக்கப்பட்டது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவை சகட்டுமேனிக்கு வசைபாட, இருதரப்பு மோதல் ஓயாமல் சென்றது.

பாஜக டெல்லி தலைமையும் கண்டுகொள்ளாமல் செல்ல அதிருப்தியான அதிமுக அதிரடியாக 'கூட்டணி முறிவு' என்றது.

கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை உடனான மோதலை கடந்து, பெரிய கட்சியான அதிமுகவையே பாஜக ஓவர்டேக் செய்ய முயற்சி செய்ததும் முக்கிய காரணம் என கூறப்பட்டது.

கூட்டணி முறிவில் அதிமுக உறுதியாக இருக்க... நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய வேளையில் எப்படியாவது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என வழிமேல் விழி வைத்து காத்திருந்தது பாஜக. ஆனால் நடக்கவில்லை. இரு கட்சிகளும் தனிக் கூட்டணியில் களமிறங்கின.

பிரசாரம் தொடங்கியதும் அதிமுக பாஜகவை நேரடியாக விமர்சிக்காமல் இருந்தது. ஒருகட்டத்தில் அதிமுகவே இருக்காது என அண்ணாமலை பேச, அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் எல்லாம் அழிந்து போவார்கள் அதிமுகவை சீண்டி பார்க்க வேண்டாம் என எச்சரித்தார் எடப்பாடி பழனிசாமி.

இதற்கிடையே தமிழகத்தில் தேர்தல் நடந்தபோது கூட இல்லாத வகையில்... தேர்தல் முடிந்ததும் பாஜகவை காட்டமாக எதிர்க்கிறது அதிமுக... ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு, எதிர்ப்பை தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பிரதமர் பதவியில் இருப்பவர் வாக்கு வங்கிக்காக சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இறையாண்மைக்கு உகந்தது அல்ல என தெரிவித்திருந்தார்.

இப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்... இன்னும் ஒரு படி மேலேபோய் விமர்சித்திருக்கிறார். பிரதமர்... ஆங்கிலேயர்கள் போல் பிரித்தாளும் கொள்கையை கையில் எடுத்துள்ளார் எனவும்... மோடி... காங்கிரஸ் என எந்த கொம்பன் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டில் எதுவும் செய்ய முடியாது என்றார்.

பாஜகவுக்கு எதிராக அமைதிகாத்த அதிமுக அசுரவேகமாக பாய்வது அரசியல் களத்தையும் பரபரக்க வைக்கிறது. இது 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான அச்சாரமா என்ற கேள்வியை எழ செய்திருக்கிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்ததால், சிறுபான்மையினர் பலத்தை இழந்துவிட்டதாக அதிமுக எண்ணுகிறது. அதேவேளையில் பாஜகவுக்கு ஜாக்பாட்டாக 4 இடங்கள் கிடைத்துவிட்டது.

இப்போதும் நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் சட்டப்பேரவை தேர்தலையே டார்க்கெட் வைக்கிறது அதிமுக. போட்டியாக அதிமுகவை ஒவர் டேக் செய்வதில் அதிதீவிரமாக இருக்கிறது பாஜக. அதற்கு எண்ட் கார்டு போடவே இப்போதே அதிமுக பாய்வதாக அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்