இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் போக்கை கைவிட வேண்டும் - ஸ்டாலின்

தேசியப் புலனாய்வு முகமையை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுவது தொடர்ந்தால், பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என திமுக தலைவர் மு,க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-30 10:26 GMT
தமிழகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு என "க்யூ " பிராஞ்ச் உள்ள நிலையில், அதையும் மீறி தேசிய புலனாய்வு முகமையை தமிழகத்திற்கு அனுப்பி இஸ்லாமிய சமுதாய மக்கள்  அனைவரையும் பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பயங்கரவாதம் எந்த மதத்தின் நெறிகளுக்கும் ஏற்புடையதல்ல என கூறியுள்ள மு.க. ஸ்டாலின், எந்த மதமும் அதை ஆதரிக்கப் போவதுமில்லை என குறிப்பிட்டு உள்ளார். சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மதத்தினரிடமும் உயர்ந்த ஒருமைப்பாட்டு உணர்வும், சிறப்பான நாட்டுப்பற்றும் தழைத்தோங்கி இருக்கிறது  என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு புரிந்து  கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுபான்மை சமுதாயத்தினரை ஒட்டுமொத்தமாக பயங்கரவாதிகளாகச் சித்திரித்து, அதன்மூலம்  பா.ஜ.க.வை தமிழகத்தில் விதைக்கலாம் என்ற நோக்கில், தமிழகத்தில் தேசியப் புலனாய்வு முகமையை பயன்படுத்துவதும், மாநில அரசுக்கே தெரியாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஒரு மத்திய அரசுக்கு எவ்விதத்திலும் அழகல்ல என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய முறையில் தீவிர அழுத்தம் கொடுத்து தேசிய புலனாய்வு முகமை தமிழகத்தில் தலையிடுவதற்கும், அப்பாவி இஸ்லாமிய மக்களை துன்புறுத்துவதற்கும், கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின், வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்