குடியரசுத்தலைவர் உரை மீதான நன்றி கூறும் தீர்மானம் : பிரதமர் நரேந்திர மோடி பதில் உரை

ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் நாம் சேமிக்க வேண்டியது அவசியம் என, பிரதமர் மோடி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-06-25 18:04 GMT
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்றார். வறுமை ஒழிப்பு, நவீனமயமாக்கல் இரண்டையும் ஒரே நேரத்தில் இணைத்து முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் கூறினார். வளர்ச்சிப் பாதையில் இருந்து நாம் ஒருபோதும் தடம் மாறவில்லை என்றும், பிரதமர் தெரிவித்தார். மக்களுக்கு தேவையான திட்டங்களை விவாதித்து நிறைவேற்ற வேண்டும் என்றும், சாமானிய மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ், மற்றவர்களின் சிறந்த பணியை எப்போதுமே அங்கீகரிப்பதில்லை என குற்றம்சாட்டினார். கடந்த கால பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோருக்கு கூட காங்கிரஸ் உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும், பாஜக ஆட்சியில், பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டதாகவும் மோடி கூறினார்.
பின்னர், எமர்ஜென்சி குறித்து நினைவு கூர்ந்த பிரதமர்மோடி, ஜூன் 25 ஆம் தேதி, என்ன நாள் என்பது குறித்து காங்கிரஸ் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றார். அப்போது மக்களவையில் பாஜக உறுப்பினர்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஜனநாயகத்தை காங்கிரஸ் சிறையில் வைத்ததாக பிரதமர் மோடி,குற்றம்சாட்டினார். அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட போது, பத்திரிகையாளர்களின் சுதந்திரம் முழுவதும் பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தண்ணீரின் அவசியத்தை பாஜக அரசு உணர்ந்திருப்பதாகவும், ஒவ்வொரு சொட்டு நீரையும், சேமிக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். இதற்காகவே ஜலசக்தி அமைச்சகத்தை ஏற்படுத்தியதாகவும், கழிப்பறை, மின்சாரம் மற்றும் எரிவாயு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தந்தது போல், தண்ணீரையும் அனைவருக்கும் கிடைக்க பாஜக அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச்செல்ல விரும்புவதாக கூறிய பிரதமர் மோடி, அதற்காக, எதிர்வரும் சவால்களை, ஒன்றுபட்டு எதிர்கொள்வோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்